சென்னை: “கேரளாவுடன் ஒப்பிட்டுப் பார்த்து தமிழகத்தில் என்ன கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதை சரிபார்க்க வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலளித்துள்ளார்.
சென்னையில் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் மின் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், கேரளாவுடன் தமிழகத்தை ஒப்பிட்டுப் பார்த்து தமிழகத்தில் என்ன கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதை சரிபார்த்து கூறியிருந்தால், அது சரியாக இருந்திருக்கும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, மின்சார உற்பத்திக்கும், விநியோகத்துக்குமான இடைவெளி ரொம்ப அதிகமாக உள்ளது. அந்த இடைவெளியை சரிசெய்ய வேண்டியுள்ளது. 2006-2011 காலக்கட்டத்தில், 2006-ல் ஏற்கெனவே என்ன மின் தேவை இருந்ததோ, அதைவிட 5 ஆண்டுகளில் 49 சதவீதம் மின் தேவைகள் அதிகரித்திருக்கிறது. அதுவே, கடந்த 5 ஆண்டுகளில் பார்த்தால் 27 முதல் 29 சதவீதம்தான் அதிகரித்துள்ளது.
இந்த 5 ஆண்டுகளில் புதிய தொழிற்சாலைகள், டேட்டா சென்டர் வரவு, ஆண்டுக்கு 10 லட்சம் கொடுக்கக் கூடிய புதிய மின் இணைப்புகள், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள 1 லட்சம் மின் இணைப்புகள், இந்த ஆண்டு கொடுக்கப்பட்டுள்ள 50 ஆயிரம் மின் இணைப்புகள்… இதையெல்லாம் கணக்கிட்டுப் பார்க்கும்போது, அடுத்த 5 ஆண்டுகளுக்கு 50 சதவீதத்திற்கு மேலாக மின்தேவைகள் ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதற்கான மின் உற்பத்தி திட்டங்கள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
பின்புலம் என்ன? – தமிழகத்தில் ஆளும் திமுகவின் கூட்டணி கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளது. இந்தச் சூழலில் மின் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த கே.பாலகிருஷ்ணன், “ஏழை, எளிய உழைக்கும் மக்களையும், நடுத்தர மக்களையும், சிறுகுறு தொழில்களையும் கடுமையாக பாதிக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதனை கண்டிக்கும் விதமாக, திமுகவின் அதிகாரபூர்வ பத்திரிகையான முரசொலியில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில், “தமிழக மார்க்சிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மின்கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என அறிக்கை விடுத்துள்ளார். மக்கள் தலையில் இந்த மின் கட்டண உயர்வை ஏற்றிட வேண்டும் என்று கழக அரசும் விரும்பவில்லை. தவிர்க்க இயலாத நிலையில் மனதில் நிறைய சங்கடங்களை சுமந்து கனத்த இதயத்தோடுதான் இது போன்ற நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டி உள்ளது இதனை கே.பாலகிருஷ்ணன் நன்கு உணர்வார்.
ஏனென்றால் மார்க்சிஸ்ட் ஆளும் கேரளத்தில் கூட மின் கட்டணம் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. தோழர் பாலகிருஷ்ணனுக்கு அது தெரியாதிருக்க முடியாது. தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் இன்று குரல் எழுப்புவது போல கேரளத்தில் மின் கட்டண உயர்வுக்கு கேரளத்து எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். கடும் விமர்சனங்களை கட்டவிழ்த்து விட்டனர். அதனையும் கே.பாலகிருஷ்ணன் அறிந்திருப்பார்.
எந்த மக்கள் நல அரசும் அது திமுக அரசாக இருந்தாலும் மார்க்சிஸ்ட் தலைமையிலான அரசாக இருந்தாலும் சில சூழ்நிலை காரணமாக இது போன்ற கட்டண உயர்வுகளை அறிவிக்க வேண்டிய நிலை உருவாகி விடுகிறது. இப்படி இக்கட்டான சூழல் உருவாகும் போது இந்த கட்டண உயர்வுகளால் ஏழை எளிய மக்கள் பாதித்துவிடக் கூடாது என்பதில் தனிக் கவனம் செலுத்திட வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க இடம் இல்லை. எனவேதான் தமிழகத்தில் 100 யூனிட் வரை மின்கட்டணம் உயரவில்லை. ஆனால் கேரளாவில் 51 முதல் 100 யூனிட் வரை உபயோகிப்பவர்களுக்குக்கூட 20 காசுகள் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. விரி விதிக்காது, சில கட்டண உயர்வுகளை ஏற்படுத்தாது எந்த அரசும் திடமாக இயங்க இயலாது.
நாம் விடும் அறிக்கை பூமராங் போல பல நேரங்களில் நம்மை நோக்கித் திரும்பிவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கை தேவை. திமுகவிற்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்குமிடையே சிண்டு முடிந்து, இந்த வலிமை மிகு கூட்டணியை முறித்துவிட சந்தர்ப்பம் கிடைக்காதா என காத்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம் என்பதை தோழர் பாலகிருஷ்ணன் அறியாதவர் அல்ல. வெறும் வாயை மென்று சுவைத்து ஜீரணித்து சுகம் காணும் அந்த வஞ்சகக் கூட்டத்தின் வாய்க்கு அவல் கிடைத்தால் என்னவாகும்? ஆகையால் நாம் விடும் அறிக்கைகள் எதிரிகள் வாய்க்கு அவலாகி விடாது எச்சரிக்கையாகச் செயல்படுவோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.