புதுடெல்லி: உலகமெங்கும் இந்தி மொழி இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14ம் தேதி இந்தி மொழி தினமாக கொண்டாடப்படும் என நாட்டின் முதல் பிரதமர் நேரு அறிவித்தார். இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி பயன்படுத்தப்படும் என்ற முடிவுக்கு 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி இந்தியாவின் அரசியல் சாசனம் அங்கீகாரம் அளித்தது.
இந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘உலகமெங்கும் இந்தி மொழி, இந்தியாவிற்கு பெருமை தேடி தந்துள்ளது. அதன் எளிமை, தன்னிச்சையான தன்மை மற்றும் உணர்திறன் எப்போதும் அனைவரையும் ஈர்க்கிறது. இந்தி தினத்தன்று, அந்த மொழியை செழுமையாகவும், அதிகாரமளிக்கும் வகையில் மாற்ற அயராது பங்காற்றிய அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்,’ என குறிப்பிட்டுள்ளார்.