9 வயது சிறுவனுக்கு அரிய சிகிச்சை.. ஜெர்மனியில் இருந்து வந்த ஸ்டெம்செல்..!

எலும்பு மஜ்ஜை தொடர்பான அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கும் மேலாக உடல்நிலை மோசமாகி வந்த சென்னை சிறுவனை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.ஜெர்மனியிலிருந்து தானமாக பெற்ற ஸ்டெம் செல்களை பொருத்தி உயிரை காத்த சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித் தொகுப்பு.

பூந்தமல்லியை சேர்ந்த கூலி தொழிலாளியின் 9 வயது மகனான அந்த சிறுவன், பான்கோமி அனீமியா என்ற எலும்பு மஜ்ஜை தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு 2 ஆண்டுகளாக வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நோய் பாதிப்பிற்கு பெரிய அளவில் சிகிச்சை முறைகளோ, மருந்து மாத்திரைகளோ இல்லை என கூறப்பட்டதால், சிறுவனின் உடல்நிலை நாளுக்கு நாள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஸ்டெம் செல் சிகிச்சை குறித்து வெளியாகி இருந்த ஆய்வு முடிவுகளின் படி, தொப்புள் கொடியில் உள்ள ஸ்டெம் செல்கள் சேகரிக்கப்பட்டு குறிப்பிட்ட கால இடைவெளியில் சிகிச்சை அளிக்கப்படும் போது நோய் குணமாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உள்ள எலும்பு மஜ்ஜை பிரிவு மருத்துவர்கள் சிறுவனுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை அளிக்க முடிவெடுத்தனர். ஆனால் சிறுவன் பிறக்கும் போது தொப்புள் கொடி சேகரித்து வைக்கப்படாததால் சரியாக பொருந்தகூடிய டோனரை கண்டறிய வேண்டிய தேவை ஏற்பட்டது.

ஸ்டெம் செல்களை தானமாக பெரும் முயற்சியாக டிகேஎம்எஸ் என்ற உலகளாவிய தனியார் அமைப்பில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் பதிவு செய்திருந்தனர். இதன்மூலம் சிறுவனின் ஸ்டெம்செல்லும் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஒரு இளைஞரின் ஸ்டெம்செல்லும் பொருந்திச்செல்வது கண்டறியப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக ஜெர்மனி இளைஞரிடம் இருந்து எலும்பு மஜ்ஜை ஸ்டெம் செல்லை தானமாக பெற்று சென்னை சிறுவனுக்கு பொருத்தி அரசு மருத்துவர்கள் சாதித்துள்ளனர்.

 

சிறுவனின் உடலில் ரத்தத் தட்ட அணுக்கள் மற்றும் வெள்ளை அணுக்கள் தட்டுப்பாடு அதிகமானதால், அவற்றை சரி செய்ய மாற்று ரத்தம் அவ்வப்போது செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவித்த மருத்துவர்கள் தற்போது சிறுவன் மருத்துவர் கண்காணிப்பில் இருப்பதாகவும், சிறுவன் உடலில் ஓடும் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் மற்றும் தட்ட அணுக்களின் குறைபாடு என்பது படிப்படியாக நீங்கி ரத்தம் சீராகி வருவதாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.

எலும்பு மஜ்ஜை தொடர்பான நோய் சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் 40 லட்சம் ரூபாய் வரையில் செலவாக கூடும் என சுட்டிக்காட்டிய மருத்துவர்கள், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சைஅளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.