மேட்டுப்பாளையம்: காரமடையில் தந்தை பெரியார் உணவகம் என்ற பெயரில் திறக்க இருந்த உணவகத்தை அடித்து நொறுக்கி தாய், மகனை தாக்கிய இந்து முன்னணியை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை கன்னார்பாளையம் நால்ரோட்டை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி நாகராணி (38). இவர்களது மகன் அருண் (20). இவர்கள் கன்னார்பாளையத்தில் தந்தை பெரியார் உணவகம் என்ற பெயரில் உணவகத்தை நேற்று காலை திறக்க இருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த உணவகத்திற்கு வந்த ஒரு கும்பல், ‘‘நாங்கள் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள். இது இந்துக்களின் கோட்டை. இங்கு தந்தை பெரியார் பெயரில் உணவகம் நடத்தக்கூடாது’’ என்று கூறினர். அதற்கு அருண் மறுப்பு தெரிவிக்கவே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கும்பல் உணவகத்தை அடித்து நொறுக்கினர். தடுக்க வந்த அருண், நாகராணி ஆகியோரை கடுமையாக தாக்கினர். இதில் இருவரும் காயம் அடைந்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் அந்த கும்பல் தப்பி ஓடியது.
காயம் அடைந்த 2 பேரையும் பொதுமக்கள் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிந்து, ரவி பாரதி (39), பிரபு (27), சுனில் என்ற சதீஷ் (32), சரணவன் (30), விஜயகுமார் (26) ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான ஒருவரை தேடி வருகிறார்கள். இவர்கள் அனைவரும் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் என்று தெரிய வருகிறது. தந்தை பெரியார் உணவகத்தை அடித்து நொறுக்கி அதன் உரிமையாளர்களை தாக்கிய சம்பவத்திற்கு பெரியாரிய உணர்வாளர்களும், முற்போக்கு அமைப்புகளை சேர்ந்தவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.