தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். அதன் படி, கடந்த 2 நாட்களாக அவர் சேலத்தில் சுற்று பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வழியாக ஈரோட்டுக்கு சசிகலா வந்தார்.
அப்போது அவருக்கு ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா பகுதியில் திரண்டு நின்றிருந்த ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்கள் மத்தியில் சசிகலா பேசும்போது தெரிவித்ததாவது:-
முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஏழை, எளிய, சாதாரண மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்கள். ஆனால், இந்த திட்டங்களுக்கு எப்படி மூடு விழா நடத்துவது என்று தி.மு.க. செயல்படுகிறது. கடந்த 15 மாதகால ஆட்சியில் தமிழக மக்களை பாதிக்கும் வகையில் சொத்து வரி 150 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது.
மேலும், மின் கட்டண உயர்வு தமிழக மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், பேருந்து கட்டணமும் உயர்த்தப்பட உள்ளது. ஓட்டுப்போட்ட மக்களை கசக்கி பிழிவது தான் திராவிட மாடலா?. இதுபோன்ற சிந்தனையை எந்த திராவிட தலைவர்களும் விட்டு சென்றதில்லை.
ஜெயலலிதா மறைவின் காரணமாக துர்பாக்கிய நிலையில் இருக்கிறோம். இதனால் எனது மனது வேதனை அடைகிறது. இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர இந்த இயக்கம் ஒற்றுமையுடன் வலிமையோடு இருக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள்.
தமிழக மக்கள் நல்ல முடிவு எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது. மக்கள் விரோத ஆட்சியா?, ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியா? என்பதை வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட வேண்டும். அந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப ஒன்றிணைவோம். என்று அவர் தெரிவித்துள்ளார்.