பள்ளி கல்வித்துறை சார்பில் வட்டார குறுமைய அளவிலான தடகள போட்டி சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. இதில், அயோத்தியாப்பட்டணம், ஏற்காடு, வாழப்பாடி ஆகிய ஒன்றியங்களில் இருந்து 46-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் இருந்து 6 முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு 3,000 மீட்டர் ஓட்டப்பந்தயம், போல் வால்ட், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், தடை தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டன. முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு வருவாய் மாவட்ட அளவில் நடக்கும் அடுத்த சுற்று போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இந்தநிலையில், மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (வியாழக்கிழமை) மற்றும் நாளை (வெள்ளிக்கிழமை) 2 நாட்கள் தடகள போட்டி நடைபெறுகிறது. இதில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.