புதுடெல்லி: பொருளாதாரத்தின் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு கூடுதலாக 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் ரவீந்திர பட், தினேஷ் மகேஸ்வரி, பர்திவாலா மற்றும் பெலா திரிவேதி ஆகிய ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு தொடர்ந்து விசாரித்து வருகிறது. நேற்று நடந்த விசாரணையின் போது மனுதாரரான திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதாடியதாவது: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு எந்த அடிப்படையில் 10 சதவீதம் கூடுதல் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதனை எப்படி ஏற்க முடியும். குறிப்பாக இதுபோன்ற விவகாரம் என்பது நமது சமுதாயத்தில் இன்னும் தீண்டாமை நிலவுவதை தெளிவாக காண்பிக்கும் வகையில் உள்ளது.
தீண்டாமையால் பல ஆண்டுகளாக அநீதி வழங்கப்பட்டு வந்த நிலையில், அதனை போக்கும் விதமாக இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. முன்பு வர்ணாசிரம் என்பது இருந்தது. ஆனால் அதற்கு பதிலாக தற்போது சாதி இருக்கிறது. ராமாயணத்தில் ஏகலைவன் கட்டை விரல் எதற்காக கேட்கப்பட்டது என்பது குறித்து நான் குறிப்பிட விரும்பவில்லை. அதேப்போன்று இன்று நமது ஜனாதிபதி கோவிலுக்குள் அனுமதிக்கபாடாதது குறித்தும் நான் சொல்லப்போவது இல்லை. சம்பிரதாயத்திற்காக சமத்துவம் என சொல்லாமல் உண்மையான வகையில் சமத்துவத்தை மேற்கொள்ள இடஒதுக்கீடு வழி வகுக்கிறது.
எனவே தான் தமிழ்நாடு இன்றைக்கும் இடஒதுக்கீடு விவகாரத்திலும், சமத்துவத்திலும் முன்னணியில் நிலவுகிறது. இன்றைக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை சொல்லி அது பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான வரம்பு என சொல்கிறார்கள். நாளை கார் இல்லாதவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என சொல்வார்கள். இதை வரையறுப்பது என்பது இயலாது என்பதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு தனது வாதத்தில் கூறினார்.