புலம்பெயர்ந்த ஹிந்துக்களின் அவலம்மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு| Dinamalar

புதுடில்லி,:பாகிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்த ஏழை ஹிந்துக்கள், புதுடில்லியில் வசிக்கும் குடிசை பகுதியில் பல ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லாத அவலநிலையை மத்திய அரசு அனுதாபத்துடன் அணுகும் என நம்புவதாக, புதுடில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தது.புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வசித்து வந்த சிறுபான்மை ஹிந்துக்கள் அங்கு மதரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளானதை தொடர்ந்து, சில ஆண்டுகளுக்கு முன் நம் நாட்டுக்கு புலம்பெயர்ந்தனர். அவர்கள் வடக்கு புதுடில்லியின் ஆதர்ஷ் நகர் குடிசை பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் இடத்திற்கு தடையில்லா சான்று வழங்கப்படாததால், மின் இணைப்பு தரப்படவில்லை. இதையடுத்து இங்குள்ள 200 குடும்பங்கள் மின் இணைப்பு இல்லாமல் மிக மோசமான நிலையில் வசித்து வருகின்றன. இந்த குடிசை பகுதிக்கு மின் இணைப்பு வழங்குவது தொடர்பாக, ஹரி ஓம் என்ற சமூக ஆர்வலர், புதுடில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த நீதிமன்றம், புலம்பெயர்ந்த ஹிந்துக்களின் அவலநிலையை மத்திய அரசு அனுதாபத்துடன் அணுகும் என நம்புவதாக நேற்று தெரிவித்தது. இந்த விவகாரத்தில் இரண்டு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.