பாட்னா: பீகாரில் கடைத் தெருவில் மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரம் தொடர்பாக, பணியில் அலட்சியமாக இருந்ததாக 7 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பீகார் மாநிலம், பெகுசராய் நகரில் உள்ள மால்கிபூர் சவுக் பகுதியில் நேற்று முன்தினம் பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் கடைத் தெருவில் திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினர். தொடர்ந்து அவர்கள் பைக்கில் சென்ற படியே அருகில் உள்ள பராணி தெர்மல் சவுக், தெக்ரா, பச்வாரா, ராஜேந்திரா பாலம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் பீதி அடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இந்த சம்பவத்தில், சந்தன்குமார் (30) என்பவர் உயிரிழந்தார். 11 பேர் படுகாயமடைந்தனர். இதுவரையிலும் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் யார் என தெரியவில்லை. இந்நிலையில், பெகுசராய் பகுதியில் பாதுகாப்பு பணியில் அலட்சியமாக இருந்ததாக 7 போலீசாரை ஏடிஜிபி ஜிதேந்திர சிங் காங்க்வார் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இவர்கள் அனைவரும் கூடுதல் சப் இன்ஸ்பெக்டர் பொறுப்புக்கும் குறைவான காவலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தொடர்பாக பெகுசராய் தொகுதி எம்பியும், ஒன்றிய அமைச்சருமான கிரிராஜ் சிங் அளித்த பேட்டியில் முதல்வர் நிதிஷ்குமாரின் காட்டாட்சி இப்போது, கொடூரமானவர்களின் ஆட்சியாக மாறி உள்ளது. அவர் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர்கள் தரும் அழுத்தத்தில் இருக்கிறார்’’ என கூறி உள்ளார்.