புதுடெல்லி: இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மீதான ரூ.200 கோடி மோசடி வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிடம் டெல்லி போலீசார் நேற்று 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். இரட்டை சிலை சின்னத்தை பெற்று தருவதற்காக தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். திகார் சிறையில் இவர் இருந்தபோது, தொழிலதிபர் மனைவி ஒருவரிடம் ரூ.200 கோடி மோசடி செய்துள்ளார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரையும் சேர்த்துள்ளது. அதில், தனக்கு கிடைத்த மோசடி பணத்தில் ஜாக்குலினுக்கு விலை உயர்ந்த கார் உள்ளிட்ட பரிசு பொருட்களை சுகேஷ் வாங்கி கொடுத்துள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. மேலும், சுகேஷை ஜாக்குலினுக்கு அறிமுகம் செய்து வைத்த பிங்கி இராணி என்பவரும் குற்றப் பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
இது தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் , ஜாக்குலின், பிங்கி இராணி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன் விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். 2 முறை ஆஜராகாமல் நழுவிய இவர்கள், நேற்று நேரில் ஆஜராகினர். ஜாக்குலினிடம் போலீசார் 8 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். மதியம் விசாரணைக்கு ஆஜரான அவர், இரவு 8 மணிக்குதான் வெளியே சென்றார். விசாரணையில், ஜாக்குலினும், பிங்கி இராணியும் முரண்பாடான பதில்களை அளித்து சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால், அவர்கள் மீதான பிடி இறுகுகிறது. மீண்டும் அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.