அரசு முறை பயணமாக மதுரை சென்றிருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். மதுரை நெல்பேட்டை பகுதியில் அண்ணா திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், ஆதிமூலம் அரசுப் பள்ளிக்கு சென்று பள்ளிக் குழந்தைகளுக்கு சத்தான காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது, குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அருகில் இருக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு ஊட்டி மகிழ்ந்தார். பின்னர் பேசிய அவர், காலை உணவு வழங்கும் திட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும் திட்டம் என பெருமையுடன் கூறிய அவர், வாழ்நாளில் பொன்னாள் என்று கூறும் அளவுக்கு இந்த நாள் அமைந்துள்ளதாக தெரிவித்தார். பள்ளிக்கு பசியோடு வரும் பிள்ளைகளுக்கு முதலில் உணவு வழங்கிய பிறகு வகுப்பறைக்கு செல்லும் வகையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உங்களது மற்ற தேவைகளை அரசு பார்த்துக் கொள்ளும். நான் இருக்கிறேன் நீங்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள் என்றும் நெகிழ்ச்சியுடன் கூறினார். வறுமையோ ஜாதியோ ஒருவரின் கல்வியை தடுக்கக்கூடாது என பெரியார், அண்ணா, கலைஞர் தெரிவித்தார்கள். அவர்கள் வழியில் இன்றைய திமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பசித்த வயிறுக்கு உணவு, தவித்த வாய்க்கு தண்ணீராக இருக்கும் திட்டம் தான் காலை சிற்றுண்டி திட்டம். எத்தகைய நிதிச்சுமை இருந்தாலும் பசி சுமையை போக்குவதே முதல் இலக்கு. படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு கொடுக்கும்போது, அவர்களின் படிக்கும் திறன் மேம்படுகிறது என பல ஆய்வுகள் கூறுகின்றன” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
#LIVE: பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் காலை உணவுத் திட்டம் தொடக்கம் https://t.co/Vk54sVMPTT
— M.K.Stalin (@mkstalin) September 15, 2022
முதல்கட்டமாக நகராட்சி மற்றும் மாநகராட்சி, தொலைதூர கிராமங்களில் இருக்கும் பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் தொடங்கி வைத்திருக்கும் இந்த திட்டத்தை நாளை முதல் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் அவர்கள் பகுதியில் தொடங்கி வைக்க இருக்கிறார்கள்.