நொய்டா : வீட்டில் ‘டைல்ஸ்’ பதித்த வேலைக்கு இரண்டு லட்சம் ரூபாய் பாக்கியை செலுத்தாததால் தொழிலதிபரின் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள காரை எரித்த கட்டட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
உத்தர பிரதேசத்தின் நொய்டா செக்டார் 45ல் வசிக்கும் தொழிலதிபர் ஆயுஷ் சவுகான். இவரது பங்களா மற்றும் அலுவலகங்களுக்கான கட்டட வேலைகளை கடந்த 12 ஆண்டுகளாக ரன்வீர் என்பவர் செய்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் சவுகானின் பங்களாவுக்கு ஹெல்மெட் அணிந்து வந்த ரன்வீர் வெளியில் நிறுத்தப்பட்டு இருந்த அவருடைய ‘மெர்சிடிஸ்’ கார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடினார்.
கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போலீசார் ரன்வீரை கைது செய்தனர்.போலீசார் விசாரித்த போது ‘சவுகான் பங்களாவில் ‘டைல்ஸ்’ பதித்த வேலைக்கு இரண்டு லட்சம் ரூபாய் பாக்கி நீண்ட மாதங்களாக நிலுவையில் உள்ளது.பல முறை கேட்டும் தர மறுக்கின்றனர். அதனால்தான் கோபத்தில் காருக்கு தீ வைத்தேன்’ என ரன்வீர் கூறியுள்ளார்.
ஆனால் இதை மறுத்துள்ள சவுகான்“எங்களிடம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ரன்வீர் வேலை செய்கிறார். ஆனால் கொரோனா ஊரடங்கு காலத்தில் எங்கள் பங்களாவில் ஒரு அவசர வேலை இருந்தது. அதனால் அருகில் இருந்த தொழிலாளர்களை வைத்து அந்த வேலையை செய்து முடித்து விட்டோம். இது ரன்வீருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து எங்களிடம் ஏற்கனவே வாக்குவாதம் செய்தார். மற்றபடி நாங்கள் உடனுக்குடன் கூலியை கொடுத்து விடுவோம்”என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement