கராச்சி: ஐநாவால் தேடப்படும் பயங்கரவாதி என பிரகடனம் செய்யப்பட்ட ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவரான தீவிரவாதி மசூத் அசார் எங்கே என்பதில் பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் மோதி வருகின்றன.
1990களில் பாகிஸ்தான் தூண்டுதலால் பல்வேறு காஷ்மீர் தனிநாடு கோரும் பிரிவினைவாத இயக்கங்கள் உருவாகின. அதில் ஒன்றுதான் ஜெய்ஷ் இ முகமது. இதன் தலைவரான மசூத் அசார், 1994-ல் ஜம்மு காஷ்மீரில் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால் மசூத் அசார் உள்ளிட்ட சில பயங்கரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் 1999-ல் பயணிகள் விமானத்தை பாகிஸ்தான் ஆதரவுடன் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். இதனால் மசூத் அசார் விடுதலை செய்யப்பட்டார்.
இந்திய சிறையில் இருந்து விடுதலையாகி பாகிஸ்தானுக்குள் பதுங்கிய மசூத் அசார்தான், இந்தியாவில் நடந்த பல்வேறு தாக்குதல்களுக்கு சூத்திரதாரியாக இருந்தார். 2001-ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல், மும்பை தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியதும் மசூத் அசார்தான். இதனால் மசூத் அசாரை ஒப்படைக்க வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு. இதையடுத்து பல்வேறு நெருக்கடிகளுக்குப் பின்னர் கண்துடைப்புக்காக மசூத் அசாரை கைது செய்த பாகிஸ்தான் பின்னர் விடுவித்தது.
அதேநேரத்தில் ஐநா சபையும் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் மசூத் அசாரையும் இணைத்தது. இருந்தபோதும் பாகிஸ்தானோ, தங்கள் நாட்டில் மசூத் அசார் இல்லை என்றே சாதித்து வருகிறது.
இந்த பின்னணியில் அண்மையில், ஆப்கானிஸ்தானில் மசூத் அசார் பதுங்கி உள்ளார்; அவரை கைது செய்து எங்களிடம் ஒப்படையுங்கள் என அந்நாட்டுக்கு பாகிஸ்தான் கடிதம் அனுப்பியது. இது ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான்களை கொந்தளிக்க வைத்தது.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள தலிபான்கள், மசூத் அசார் உங்கள் நாட்டில்தான் பதுங்கி உள்ளார்; எங்கள் நாட்டில் பதுங்கி இருப்பதாக பொய்யான தகவலை ஏன் பரப்ப வேண்டும் என கொந்தளித்துள்ளனர். மேலும் ஜெய்ஷ் இ முகமது என்கிற இயக்கம் பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படக் கூடியது. மசூத் அசார் எங்களிடம் இதுவரை அடைக்கலம் கேட்டது இல்லை. மசூத் அசார், ஆப்கானிஸ்தானில் பதுங்கி உள்ளதாக ஊடகங்கள்தான் சொல்கின்றன. அதிகாரப்பூர்வமாக ஆப்கான் அரசிடம் இதுவரை மசூத் அசார் அடைக்கலம் கேட்டதும் இல்லை; நாங்களும் அடைக்கலம் தந்ததும் இல்லை என கூறியுள்ளனர் தலிபான்கள். இதனால் இருநாடுகளிடையே உறவில் பதற்ற்மான நிலை உருவாகி உள்ளது.