புதுடெல்லி: பஞ்சாபில் 10 ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்களிடம் பாஜ தலா ரூ.25 கோடி பேரம் பேசுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். பஞ்சாபில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியை கவிழ்ப்பதற்காக ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ.க்களை விலைக்கு வாங்க பாஜ முயற்சிக்கிறது. இது பற்றி டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அளித்த பேட்டியில், `பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஒரு எம்எல்ஏ.வுக்கு ரூ.25 கோடி தருவதாக பாஜ பேரம் பேசியதாக நேற்று தகவல் கிடைத்தது. அவர்கள் தொடர்பு கொண்ட 10 எம்எல்ஏ.க்களும் இன்று (நேற்று) இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேச இருக்கின்றனர்,’ என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறிய போது, `பாஜ, எம்எல்ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்ப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. அனைத்து மாநிலங்களிலும் எம்எல்ஏ.க்களை விலைக்கு வாங்க ஆபரேஷன் தாமரையை பாஜ பயன்படுத்துகிறது. இல்லையெனில், சிபிஐ, அமலாக்கத் துறை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து அச்சுறுத்துகிறது. எம்எல்ஏ.க்களை விலைக்கு வாங்க மக்களின் பணத்தை அரசு செலவிடுகிறது. இதனால்தான் நாட்டில் விலைவாசி உயர்ந்து வருகிறது,’ என்று கூறினார்.