ஆவடி: விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை

ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டை பகுதியில் இந்திய விமானப்படை பயிற்சி மையம் அமைந்துள்ளது. இங்கு வீரர்களுக்கு டெக்னீசியன் மற்றும் சட்டம் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இங்கு ஆண்டுக்கு இரு முறை பயிற்சி முடித்த வீரர்களை இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இங்கு குஜராத் மாநிலம், கொடிநூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான நீரோவ் சௌஹான் என்ற வீரர், Assistant air craft man பதவியில் கடந்த ஆண்டு பணிக்கு சேர்ந்துள்ளார். இவருக்கு 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை பாதுகாப்பு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதன்கிழமை நீரோவ் செளஹான் ஆவடி இந்திய விமானப்படை அலுவலகத்தின் முன் பகுதியில் AK47 ரக துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். மாலை சுமார் 4 மணி அளவில் இவர் கையில் வைத்திருந்த துப்பாக்கியால்  கழுத்தில் சுட்டு கொண்டுள்ளார். இதில் அவரின் கழுத்தில் 3 தோட்டாக்கள் பாய்ந்ததில் நீரோவ் செளஹான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக வீரர்கள், உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து விமானப்படை அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், இந்த சம்பவம் குறித்து விமான படை அதிகாரிகள் முத்தாபுதுப்பேட்டை போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். 

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த முத்தாபுதுப்பேட்டை காவல்துறை அதிகாரிகள், சடலத்தை கைப்பற்றி உடற்கூறு சோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகார் அடிப்படையில் காவல் ஆய்வாளர் ஜெய்கிருஷ்ணன் தலைமையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விமானப் படை வீரர் நீரோவ் சௌஹான் தற்கொலைக்கு குடும்பப் பிரச்சனையா? அல்லது பணியில் ஏற்பட்ட மன அழுத்தமா? என தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆவடியில் மத்திய ராணுவத்திற்கு சொந்தமான பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில் வீரர்களுக்கு உயரதிகாரிகள் தொடர் அழுத்தம் கொடுப்பதால் அவ்வப்போது வீரர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாகியுள்ளது. ஒரு சில வருடங்களுக்கு முன்னர் இதேபோன்று பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர், சக வீரரை துப்பாக்கியால் சுட்டு கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.