மேற்கு வங்கத்தில் பல அரசியல் முன்னெடுப்புகளை பா.ஜ.க செயல்படுத்திவருகிறது. அதைத் தொடர்ந்த நேற்று கொல்கத்தாவில் ‘நபன்னா அபிஜன்’, அதாவது ஊழலுக்கு எதிரான போராட்டம் என்ற அணிவகுப்பு திட்டமிடப்பட்டது. மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பா.ஜ.க உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கலந்துகொள்ள பா.ஜ.க ஏழு ரயில்களை வாடகைக்கு எடுத்திருந்தது. இந்த நிலையில், நபன்னா அபிஜன் பேரணியின் போது காவல்துறைக்கும் பா.ஜ.க தொண்டர்களுக்கு மத்தியில் கலவரம் வெடித்திருக்கிறது.
இதில் பல காவல்துறை அதிகாரிகளும், பா.ஜ.க தொண்டர்களும் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. பா.ஜ.க தொண்டர்கள் காவல்துறையின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். கும்பல் தாக்குதலின் காரணமாகப் பல காவல்துறையினரின் பாதுகாப்புக் கவசம் இரண்டாக உடைந்திருக்கிறது. காவல் நிலையம் அருகே காவல்துறை வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், பூர்பா மெதினிபூர் மாவட்டத்தில் உள்ள நிம்டோரியில் நடந்த கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, “‘நபன்னா அபிஜன்’ நிகழ்ச்சியின் போது பா.ஜ.க-வினர் பிரச்னையைத் தூண்டுவதற்காக வெளி மாநிலங்களிலிருந்து ரயில்களில் குண்டர்களை அழைத்து வந்ததிருக்கின்றனர். அந்தப் பேரணியில் பங்கேற்றவர்களால் பல காவல்துறை அதிகாரிகள் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். காவல்துறை நினைத்திருந்தால், தங்களைத் தற்காத்துக்கொள்ளத் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம், ஆனால் எங்கள் நிர்வாகம் அதிகபட்ச நிதானத்தைக் காட்டியிருக்கிறது.
வங்காளத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜைக்கு சில வாரங்கள் உள்ள நிலையில், இந்த வன்முறையால் பயணிகள் மற்றும் வணிகர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஜனநாயக மற்றும் அமைதியான போராட்டங்களுக்கு எதிராக எங்களிடம் எதுவும் இல்லை. ஆனால், பா.ஜ.க-வும் அதன் ஆதரவாளர்களும் வன்முறை, காழ்ப்புணர்ச்சி மற்றும் தீவைப்புகளில் ஈடுபட்டனர். மக்களின் சொத்துக்களை எரித்து மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். குற்றவாளிகள் கைதுகள் செய்யப்படுகின்றனர், சட்டம் அதன் கடமையைச் செய்யும்” என்று தெரிவித்திருக்கிறார்.