மும்பை: பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் சித்தார்த் மல்கோத்ரா மீது மத நம்பிக்கையை புண்படுத்தி விட்டதாக வழக்கு தொடரப்பட்டு பரபரப்பை கிளப்பியுள்ளது.
இருவரது நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள Thank God படத்தின் டிரைலரை சமீபத்தில் பார்த்து விட்டுத் தான் இப்படியொரு வழக்கு இவர்கள் மீது தொடரப்பட்டுள்ளது.
தேங்க் காட் படத்தில் சித்திரகுப்தனாக நடிகர் அஜய் தேவ்கன் நடித்துள்ள நிலையில், இந்த பிரச்சனை கிளம்பி உள்ளது.
பாலிவுட்டில் எதிர்ப்பு
பாலிவுட்டில் எந்தவொரு படமும் நிம்மதியாக வெளியாகி ரசிகர்களை சென்றடைய முடியாத அளவுக்கு அங்கே ஏகப்பட்ட எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. இந்து மதத்தை தொடர்ந்து பாலிவுட் இழிவுப்படுத்தி வருவதாக பெரும் குற்றச்சாட்டே எழுந்து தான் பாய்காட் பாலிவுட் ஹாஷ்டேக் எல்லாம் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.
தேங்க் காட்
இந்நிலையில் கடவுளுக்கு நன்றி என்கிற டைட்டிலில் உருவாகி உள்ள அஜய்தேவ்கன், சித்தார்த் மல்கோத்ராவின் படத்தில் அப்படி என்ன பிரச்சனை? எதற்கு இப்படியொரு வழக்கு தொடரப்பட்டுள்ளது என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு காரணம் படத்தில் சித்திர குப்தனாக அஜய்தேவ்கன் நடித்துள்ளது தான் காரணம் என்கின்றனர்.
சித்திர குப்தா
வடமாநிலத்தில் சித்திர குப்தரை கடவுளாக வழிபடும் கயாஸ்தா சமூகத்தை சேர்ந்த சிலர், நீதிக் கடவுளான சித்திர குப்தரை பேண்ட் சர்ட் போட்ட நவீன ஆசாமியாக மாற்றி உள்ளனர் என்றும், தவறான ஜோக்குகள் டிரைலரில் வெளியாகி சித்திர குப்தரை அவமதிக்கும் விதமாக உள்ளதாக நடிகர் அஜய் தேவ்கன், சித்தார்த் மல்கோத்ரா மற்றும் படத்தின் இயக்குநர் இந்திர குமார் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
விளக்கம் தர உத்தரவு
ஆனந்த் ஸ்ரீவத்சவா, ப்ரிஜேஷ் நிஷாத், மான் சிங் உள்ளிட்ட மூவர் தொடுத்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் இதுதொடர்பான உரிய விளக்கத்தை படக்குழு கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 24ம் தேதி இந்த படம் திரைக்க வர காத்திருக்கிறது.
பாய்காட் கிளம்புமா
சித்திர குப்த கடவுளை தவறாக சித்தரித்ததாக படக்குழுவினர் மீது வழக்கு பாய்ந்துள்ள நிலையில், அஜய் தேவ்கனின் தேங்க் காட் படத்தையும் பாலிவுட் ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என ஹாஷ்டேக் டிரெண்டாகுமா? என்கிற அச்சம் படக்குழுவினருக்கு ஏற்பட்டுள்ளது.