அமிர்தசரஸ்: தங்களது 10 எம்எல்ஏக்களுக்கு குறி வைத்த நிலையில், பண பேரத்தை பாஜக நடத்தி உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி புகார் தெரிவித்ததையடுத்து, பஞ்சாப் மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்… இது அம்மாநிலத்தில் பரபரப்பை கிளப்பி வருகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி அரசு நடக்கிறது.. அந்த அரசை கவிழ்க்க பாஜகவும் பலவாறாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில், அம்மாநில நிதியமைச்சரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான ஹர்பால்சிங் சீமா பகீர் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.. ஆனால், இதை ஆம் ஆத்மி மறுத்து வருகிறது.
பாஜக
இதுகுறித்து ஹர்பால்சிங் சீமா சொல்லும்போது, “டெல்லியில் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்கும் முயற்சி தோல்வி அடைந்ததும், பஞ்சாப் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பாஜக முயற்சிக்கிறது.. இதுக்காகத்தான், பாஜகவினர் சிலரை ஏற்பாடு செய்து, 7 முதல் 10 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க வலையை விரித்து வருகிறது.. தங்களிடம் வந்தால், தலா ரூ.25 கோடி தருவதாகவும், பாஜக ஆட்சி அமைத்தால் அமைச்சர் பதவி நிச்சயம் என்றும் ஆசைவார்த்தைகளை அள்ளி தெளித்துள்ளனர்..
10 எம்எல்ஏக்கள்
அதுமட்டுமல்லாமல், இன்னும் கூடுதலாக எம்எல்ஏக்களை பாஜக பக்கம் அழைத்து வந்தால், இன்னும் அதிக பணம் அளிக்கிறோம் என்றும், பெரிய புள்ளிகளை சந்திக்க ஏற்பாடு செய்கிறோம் என்றெல்லாம் பேரம் பேசியுள்ளனர். இப்படி ஒரு வாரமாகவே நடந்து இருக்கிறது.. இதற்கான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவோம் என்று ஹர்பால்சிங் சீமா தெரிவித்திருந்தார்.
ஆபரேஷன் தாமரை
இதே குற்றச்சாட்டைத்தான் அரவிந்த் கெஜ்ரிவாலும் கூறியிருந்தார்.. “பாஜகவின் ‘ஆபரேஷன் தாமரை’ டெல்லியில் தோல்வியடைந்ததால், இந்த வேலையை பாஜக பார்த்து வருகிறது.. மக்களின் ஓட்டுக்களை பெறாமல், வெற்றி பெற்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை பிடிக்க முயல்கிறது பாஜக என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.. ஆம் ஆத்மியின் இந்த புகார், பஞ்சாப்பில் மிகப்பெரிய சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. தங்களது எம்எல்ஏக்களிடம் பண பேரம் நடத்துவதாக பாஜக மீது ஆம் ஆத்மி கட்சி புகார் கூறியிருப்பதையடுத்து இது தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள்ளது.
விஜிலென்ஸ்
ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் ஐபிசி பிரிவுகளின் கீழ் மொகாலி மாநில குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்… இப்போதைக்கு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நிலையான வழிகாட்டுதல்களின்படி விசாரணை விஜிலென்ஸ் பீரோவுக்கு மாற்றப்படும் என்றும் காவல்துறை செய்தி தொடர்பாளர் உறுதி கூறியுள்ளார்… இதற்கு பாஜக தரப்பு என்ன விளக்கம் தரப்போகிறது என்று இனிமேல்தான் தெரியவரும்.