Doctor Vikatan: தினமும் இனிப்பு சாப்பிடும் பழக்கம்… நிறுத்த வழி உண்டா?

Doctor Vikatan: எனக்கு உடல்நலனில் மிகுந்த அக்கறை உண்டு. மிகவும் கவனமாக, பார்த்துப் பார்த்துதான் சாப்பிடுவேன். ஆனாலும் இனிப்பு சாப்பிடும் பழக்கத்தை மட்டும் என்னால் நிறுத்த முடியவில்லை. தினமும் ஒருமுறை, ஏதேனும் இனிப்பு சாப்பிடுவது பல வருடங்களாகத் தொடர்கிறது. இதை எப்படி நிறுத்துவது?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்…

ஷைனி சுரேந்திரன்

இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற உணர்வு, உங்கள் உடலில் ஏதோ வைட்டமின்கள், தாதுச்சத்துகள் மற்றும் நுண்ணூட்டச்சத்துகளின் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். கவனமாகவும் பார்த்துப் பார்த்தும் சாப்பிடுவதாகச் சொல்கிற நீங்கள், சரிவிகித உணவாகத் தேர்வுசெய்து சாப்பிட்டீர்கள் என்றால் இந்த இனிப்புத் தேடல் உணர்வு குறைவதை உணர்வீர்கள்.

உங்கள் உணவில் புரதச்சத்து எவ்வளவு சேர்கிறது என்பதை கவனியுங்கள். இந்தியர்களின் உணவில் புரதச்சத்துக் குறைபாடு என்பது பரவலாகக் காணப்படுகிறது. உங்களுடைய பிரதான உணவில் 20 முதல் 30 கிராம் அளவுக்கும், ஸ்நாக்ஸில் 5 முதல் 10 கிராம் அளவுக்கும், புரதச்சத்து இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

தூக்கத்துக்கும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு என்பதைப் பலரும் உணர்வதே இல்லை. இரவில் 9.30 மணி முதல் 10 மணிக்குள் தூங்குவதுதான் சரியான பழக்கம். அந்த நேரத்தில் தூங்கும்போதுதான் உடல் உறுப்புகளின் பழுதுபார்க்கும் வேலை சிறப்பாக நடக்கும். செல்கள் புத்துணர்வடையும். ஹார்மோன் சமநிலையின்மை சரிசெய்யப்படும்.

சரியான நேரத்துக்குத் தூங்க வேண்டுமானால், இரவில் கேட்ஜெட் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். மாலை வேளைகளில் கடினமான உடற்பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும். டி.வி பார்ப்பதைக் குறைக்க வேண்டும். ஸ்ட்ரெஸ்ஸை தூண்டும் விஷயங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

இவை தவிர ஒருவரின் ஆளுமையும் இந்த விஷயத்தில் கவனிக்கப்பட வேண்டியதாகிறது. இனிப்பை பார்த்தால் சிறிதளவு மட்டும் எடுத்துக்கொண்டு திருப்தியடைபவர்களும் இருக்கிறார்கள். பெரிய பார் சாக்லேட்டையும் முழுவதுமாகச் சாப்பிட்டு முடிப்பவர்களும் இருக்கிறார்கள். இப்படிச் சாப்பிடுவதன் பின்னணியில் அவர்களுக்கு கடுமையான மன அழுத்தம் ஏதேனும் உள்ளதா என்றும் கவனிக்க வேண்டும்.

சுவை

உங்களைப் போல பலருக்கும் இந்தப் பழக்கம் பல ஆண்டுகளாகத் தொடரும். அவர்கள் ஒரே இரவில் இனிப்பு சாப்பிடுவதை நிறுத்த நினைப்பது சாத்தியமில்லை. அது உளவியல் ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தும் என்பதால் முதல்கட்டமாக ஆரோக்கியமான இனிப்புகளைச் சாப்பிடப் பழகலாம். அடுத்தகட்டமாக அளவைக் குறைப்பது சரியானதாக இருக்கும்.

இதையெல்லாம் செய்வதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகி, உங்கள் உடலில் ஏதேனும் சத்துக் குறைபாடு இருக்கிறதா என்பதை டெஸ்ட் செய்து, அப்படியிருப்பின் அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொள்வது அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.