Chennai Tamil News: சமூகத்தில் நடக்கின்ற குற்றங்களுக்கு எதிராகவும், மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு தேவையான அரசு விதிகளை, பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்க ஆரம்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு ஒரு புதிய முயற்சி எடுத்துள்ளது.
சிறார் குற்றச்செயல்களை செய்யாமல் தடுக்கவும், விதிமீறல்களில் மாட்டிக்கொள்ளும் சிறுவர்களைக் கண்டறிந்து வழிகாட்டவும் மாநகர காவல்துறை ‘சிற்பி’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்து வைக்கிறது.
சென்னையில் உள்ள 100 தமிழக அரசு சார்ந்த பள்ளிகளில் தலா 50 மாணவர்கள் என்று மொத்தம் சுமார் 5,000 மாணவர்களை இந்த ‘சிற்பி’ திட்டத்திற்குள் மாநகர காவல் துறை சேர்த்துள்ளது.
(ஸ்டூடெண்ட்ஸ் இன் ரெஸ்பான்சிபிள் போலீஸ் இனிஷியேடிவ்ஸ்) என்ற விரிவாக்கத்தில் அடங்கும் ‘சிற்பி’ என்ற இந்த திட்டத்திற்குள், 8-ம் வகுப்பு முதல் உள்ள மாணவர்களை தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு தனி சீருடை வழங்கப்பட்டு, பள்ளிகளில் தேசிய மாணவர் படை (என்.சி.சி) போன்று இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த காவல் துறை திட்டமிட்டுள்ளது.
காவல் கட்டுப்பாட்டு அறை அவசர எண், காவலன் செயலி, முதியோர் உதவி எண், காவல் கரங்கள் உள்ளிட்ட அவசர கால எண்கள் குறித்து மாணவர்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் கற்பிக்கப்படும். மேலும், அவர்களைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் பள்ளி மாணவர்களின் தகவல்களை பெறுவதற்கு உரிய பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சிற்பி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “காவல்துறை மக்களின் நண்பன் என்று சொல்கிறோம். அதற்கேற்ப மக்களும் காவல்துறையை நண்பர்களாக பார்க்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து.
காவல்துறையும், மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் குற்றங்கள் குறையும் என்பதைவிட குற்றமே நிகழாமல் தடுக்கப்படும். அந்த வகையில் மக்களையும், காவல்துறையையும் ஒன்றிணைக்க கூடிய எத்தனையோ திட்டங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருக்கிறது.
அப்படி நடைமுறையில் இருக்கும் பல்வேறு திட்டங்களுடன் ‘சிற்பி’ ஒரு புதிய முன்னெடுப்பாக தமிழ்நாடு காவல்துறை ஆரம்பித்துள்ளது. சிற்பி என்கிற இந்த திட்டம் பொறுப்புமிக்க மாணவர்களை உருவாக்கக்கூடிய திட்டம்.
இந்த திட்டத்தை, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதியன்று, தமிழக சட்டப்பேரவையில் நான் அறிவித்தேன். அறிவித்த நேரத்தில், ரூ.4 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் இந்த திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக நான் அறிவித்தேன்.
சென்னை மாநகரில் உள்ள 100 அரசுப் பள்ளிகளில் தலா 50 மாணவர்கள் பங்கேற்கக்கூடிய வகையில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படுகிறது. சிறுவர்களின் இளமை காலம் முதலே பொது ஒழுக்கம் உள்ளவர்களாகவும், சமூக பொறுப்பு உள்ளவர்களாகவும் மாற்ற இந்த திட்டம் பயன்படும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
சிறார் குற்றங்களை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பு கவனம் செலுத்திக்கொண்டு இருக்கிறது. சிறார், குற்ற செயல்களில் ஈடுபட குடும்ப உறுப்பினர்களின் கவனக்குறைவு, போதிய வருமானம் இல்லாமை, ஆதரவு இல்லாமை, வேலை வாய்ப்பின்மை போன்றவை பெரும்பாலும் இதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.
இவற்றை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலமாக சிறார்கள் குற்ற செயல்களில் ஈடுபடுவதை கட்டுப்படுத்த முடியும். இதுவே இந்த திட்டத்தின் நோக்கமாகவும் இருக்கிறது. வளர்ச்சி என்பது ஒரு புறம் இருந்தாலும், மற்றொரு புறம் சில சமூக பிரச்சனைகள் அதிகமாகி வருவதை நாம் கவனித்து தடுக்க வேண்டும்.
போதை பொருள் ஒழிப்பு, குடி பழக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகள், சட்டம் சார்ந்த விழிப்புணர்வு பெறச்செய்தல், அரசு சார்ந்த மற்றும் அரசு சாரா அமைப்புகளுடன் தொடர்பினை ஏற்படுத்துதல், சுய ஆளுமைத்திறனை மேம்படுத்துதல், பொதுமக்களுடன் தொடர்பு, இளம் வயதில் இருந்தே போக்குவரத்து விதிகளை கடைபிடித்தல் ஆகியவற்றை மாணவர்கள் இந்த திட்டத்தில் ஈடுபட்டு கற்றுக்கொள்ள வேண்டும்.
இப்படி உருவாக்கப்படும் மாணவர்கள் எதிர்காலத்தில் நிச்சயமாக தலை சிறந்து விளங்குவார்கள். இது குறித்து காவல்துறையினர், உயர் அதிகாரிகளிடம் இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்த உள்ளீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள், இந்த செயல்திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 100 பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலக்கூடிய 2,764 மாணவர்களும், 2,236 மாணவிகளும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு பள்ளியிலும் 2 ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று கூறினர்.
இந்த பள்ளிகளில் ஒவ்வொரு புதன்கிழமையும் மாணவ-மாணவிகள் அப்பள்ளியின் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் முன்னிலையில் ஒன்றிணைந்து, அவர்களுக்கான வகுப்புகளை காவல்துறை அதிகாரிகளும், துறை சார் நிபுணத்துவம் பெற்றவர்களும் நடத்துவார்கள். இது தொடர்பாக மாணவ-மாணவிகளுக்கு புத்தகம் ஒன்று வழங்கப்படும். இந்த வகுப்புகள் நடைபெறும் தருணங்களில் மாணவ-மாணவிகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படும்.
மேலும் மாணவ-மாணவிகள் நிர்ணயிக்கப்பட்ட 8 இடங்களுக்கு சுற்றுலாவுக்காக அழைத்து செல்லப்படுவார்கள் என்று காவல்துறை அதிகாரிகள் சொன்னார்கள்.
இந்த பயிற்சி காலத்தில் மனித உரிமை மீறல்கள் இருக்கக்கூடாது. அவர்களின் தன்மானத்துக்கு இழுக்கு ஏற்படும் வகையில் யாரும் நடக்கக்கூடாது. எந்தவிதமான புகாரும் வராமல் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று நான் எல்லோரையும் கேட்டுக்கொள்கிறேன். நல்லொழுக்கம் கொண்டவர்களாக அவர்களை வளர்ப்பதன் மூலமாக நல்ல தலைவர்களை உருவாக்குவோம்”, என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil