தமிழுக்கு இந்தி எதிரியா… என்ன சொல்கிறார் அமித் ஷா?

குஜராத் மாநிலம் சூரத்தில் அகில இந்திய அலுவல் மொழி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார். இந்த  மாநாட்டில், இந்தி தொடர்பான அகராதியான’ஹிந்தி சப்த் சிந்து (பதிப்பு-1)’ தொடர்பான 2.0 கருவி அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல் இஸ்ரோவால் வெளியிடப்பட்ட ‘கவிதை கதா’ என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது. மாநாட்டில் கலந்துகொண்ட அமித்ஷா பேசுகையில், “மாநில மொழிகளுக்கு எதிராக இந்தியை நிறுத்த தவறான பரப்புரை நடந்துவருகிறது. இந்தியும், குஜராத்தியும் போட்டியாளர்கள், இந்தியும், தமிழும் போட்டியாளர்கள், இந்தியும், மராத்தியும் போட்டியாளர்கள் என அவர்கள் பொய் பரப்புரை செய்கிறார்கள். நாட்டில் உள்ள எந்த மொழிக்கும் இந்தி போட்டியாளராக இருக்க முடியாது. நாட்டில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் இந்தி நண்பன் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தி செழுமை அடையும்போதுதான் மாநில மொழிகளும் செழுமை அடையும். இந்தியையும் ஒன்றாக வைத்துக்கொண்டே மாநில மொழிகளை வலுப்படுத்துவது அவசியம். மொழிகள் இணைந்து இருப்பதன் அவசியத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்ற மொழிகளில் இருந்து வார்த்தைகளை எடுத்துக் கொள்ளும் அளவுக்கு இந்தியை நெகிழ்வுத்தன்மை கொண்டதாக ஆக்க வேண்டும். 

 

மொழிகளின் ஒருங்கிணைப்பை நாம் ஏற்றுக்கொள்ளாதவரை நமது சொந்த மொழியில் நாட்டை வழிநடத்தும் கனவை நனவாக்க முடியாது. அனைத்து மொழிகளையும், தாய்மொழியையும் உயிர்ப்புடனும், செழிப்பாகவும் வைத்துக்கொள்வது நமது நோக்கமாக இருக்க வேண்டும். எல்லா மொழிகளின் செழிப்பில்தான் இந்தியும் செழிப்பாக இருக்கும்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.