தேசிய சபை தொடர்பான பிரேரணை பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகம் மற்றும் ஒழுங்குப் புத்தகத்துக்கான அனுபந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது

பாராளுமன்றத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்படவுள்ள “தேசிய சபை” என்ற பெயரிலான பாராளுமன்ற குழு தொடர்பான பிரேரணை எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதிக்கான ஒழுங்குப் புத்தகம் மற்றும் ஒழுங்குப் புத்தகத்துக்கான அனுபந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்தக் குழுவின் தலைவர் பதவி சபாநாயகருக்கு வழங்கப்படவிருப்பதுடன், இதன் உறுப்பினர்களான பிரதமர், பாராளுமன்ற சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், ஆளும் கட்சியின் முதற்கோலாசான் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களால் தீர்மானிக்கப்பட்டவாறு இலங்கையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிலிருந்து ஒன்பதாவது பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முப்பந்தைந்துக்கும் (35) மேற்படாதோர் உறுப்பினர்களாகக் காணப்படுவர்.

இதற்கமைய,

  • குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால தேசிய கொள்கைகளை வகுப்பதற்கான வழிகாட்டுதுல்கள் தொடர்பான பாராளுமன்றத்தின் பொதுவான முன்னுரிமைகளைத் தீர்மானிப்பதற்கும்,
  • பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பாக குறுகிய மற்றும் நடுத்தர கால பொதுவான அதிகுறைந்த நிகழ்ச்சித் திட்டங்கள் பற்றிய உடன்பாட்டிற்கு வருவதற்கும்,
  • அமைச்சரவை அமைச்சர்கள், தேசிய பேரவை, விசேட குழுக்களின் தவிசாளர்கள் மற்றும் இளைஞர் அமைப்புக்களின் இளைஞர் அவதானிப்பாளர்கள் ஆகியோர் விசேட கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும் இதில் முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன.

தேசிய சபையானது துறைசார் மேற்பார்வவைக் குழுக்கள், அரசாங்க நிதி பற்றிய குழு, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு, அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, வங்கித் தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழு, வழிவகைகள் பற்றிய குழு, பொருளாதார உறுதிப்படுத்தல் குழு, அத்துடன் அரசாங்கக் கணக்குகளைக் கட்டுப்படுத்தும் ஏதேனும் குழு ஆகியவற்றிலிருந்து அறிக்கைகளைக் கோருவதற்கான தத்துங்களைக் கொண்டிருக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.