விழுப்புரம்: அமைச்சர் துரைமுருகன் நிகழ்ச்சியின்போது மின் ஏற்பட்டதால், அமைச்சர் பாதியிலேய சென்றுவிட்டதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக, இரண்டு மின்சார வாரிய அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அமைச்சர் நிகழ்ச்சியில் மின்தடை வந்தால் சஸ்பெண்ட்…ஆனால் மக்களுக்கு மின்தடை ஏற்பட்டால் என்ன செய்வீர்கள் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா கேள்வி எழுப்பி உள்ளார்.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே தேமுதிக சார்பில் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா, தேமுதிகவின் 18ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு, மாணவிகள் மற்றும் ஏழை, எளிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசும்போது, ஏழை மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்கவே விஜயகாந்த், இந்த இயக்கத்தை நடத்தி வருகிறார். விஜயகாந்த் நன்றாக இருக்கிறார். பேசுவதிலும், நடப்பதிலும்தான் கொஞ்சம் தொய்வு. மக்களை சந்திக்க வேண்டிய நேரத்தில் நிச்சயம் சந்திக்க வருவார் என்றவர் தற்போதைய அரசியல் களம் குறித்து விமர்சித்தார்.
இன்றைக்கு தமிழகத்தில் மின் கட்டண உயர்வு ஒரு பக்கம், மற்றொரு பக்கம் மின்வெட்டு பிரச்சினை உள்ளது என்று கூறியவர், சமீபத்தில், காட்பாடியில் துரைமுருகன் பங்கேற்ற விழாவில் 3 முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அவர் பாதியிலேயே புறப்பட்டுவிட்டார். அதன் பிறகு , இதற்கு காரணமா என கூறி 2 மின்வாரிய என்ஜினீயர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர் என்பதை தெரிவித்தவர், உங்களுக்கு மின்தடை வந்தால் சஸ்பெண்டு, கோடிக்கணக்கான மக்கள், மின்சாரம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள், எத்தனை பேரை சஸ்பெண்டு செய்யப்போகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.
திமுக ஆட்சியில், தமிழகம் பல லட்சம் கோடி கடனில் உள்ளது. ஒவ்வொரு மனிதர்கள் மீதும் 900 ரூபாய் கடன் உள்ளது. இதற்கு காரணம், தி.மு.க., அ.தி.மு.க.தான் என்றும் குற்றம் சாட்டினார்.