தேனி மாவட்டத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கல்லூரி மாணவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடி கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் மகாவிஷ்ணு(21). இவர் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் மகாவிஷ்ணு, தென்றல் நகர் பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியுடன் பழகி வந்துள்ளார்.
மேலும் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி மகாவிஷ்ணு, தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் மாணவி மகாவிஷ்ணுவுடன் பழகுவதை நிறுத்திக்கொண்ட போதும், தொடர்ந்து பாலியல் தொல்லை செய்து வந்துள்ளார். இதையடுத்து மாணவி இது பற்றி தனது தாயிடம் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, மாணவியின் தாயார் இதுகுறித்து போடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மகாவிஷ்ணுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.