வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோலாலம்பூர்: மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சாமிவேலு தனது 86வது வயதில் இன்று (செப்.,15) அதிகாலை காலமானார்.
மலேசியாவில் இருக்கும் தமிழ் அரசியல் தலைவர்களில் முக்கியமான சாமி வேலு. மலேசியாவின் இபோ நகரில் 1936ம் ஆண்டு பிறந்த இவர், 1959ம் ஆண்டு மலேசிய அரசியிலில் கால்பதித்தார். பல்வேறு முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளார். மலேசிய இந்தியன் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. இந்த தகவலை மலேசிய இந்திய காங்கிரசின் எஸ்.சுப்பிரமணியன் உறுதிப்படுத்தினார்.
இது தொடர்பாக சுப்பிரமணியன் கூறுகையில், ‘மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சாமி வேலு இன்று உயிரிழந்த செய்தியை கனத்த இதயத்துடன் தெரிவிக்கிறேன். அவர் மலேசிய நாட்டிற்கும் இந்திய சமூகத்தினருக்கு ஆற்றிய சேவை மிகவும் சிறப்பான ஒன்று’ என்றார். சாமி வேலுவின் மறைவுக்கு மலேசியாவின் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் இந்திய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் மலேசிய இந்திய காங்கிரஸின் முன்னாள் தலைவர் எஸ். சாமி வேலு, 1974ம் ஆண்டு முதல் 2008 வரை சுங்கை சிப்புட் எம்.பி.யாகவும், 1979 முதல் 1989 வரை பணித்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். 1989 முதல் 1995 வரை எரிசக்தி, தொலைத்தொடர்பு மற்றும் தபால் துறை அமைச்சராக இருந்தார். அதாவது, 1979ம் ஆண்டு முதல் 31 ஆண்டுகள் கேபினட் அமைச்சராக இருந்துள்ளார். அதேபோல், ம.இ.கா., தலைவராக 29 ஆண்டுகள் இருந்துள்ளார்.
இறுதி ஊர்வலம்

இந்த நிலையில், சாமி வேலுவின் குடும்பத்தினர் சார்பாக அவரது முன்னாள் பத்திரிகை தொடர்பு செயலாளர் சிவபாலன் கூறுகையில், ‘சாமி வேலுவின் பூத உடல், இறுதி அஞ்சலிக்காக கோலாலம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று பிற்பகல் 2 மணி முதல் வைக்கப்படுகிறது. அவரது இறுதி ஊர்வலம் நாளை பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு மாலை 4 மணிக்கு சேரஸில் உள்ள டி.பி.கே.எல் கல்லறை வந்து சேரும்’ எனத் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement