பிராந்திய மொழிகளுக்கு இந்தி போட்டி இல்லையா? அமித்ஷாவுக்கு பதில் கொடுக்கும் கி வீரமணி

சென்னை: இந்தியாவை இணைக்குமா இந்தி அல்லது பிளக்குமா என்பதை ஒவ்வொரு மாநிலமும் சொல்கிறது என உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கீ.வீரமணி பதிலளித்துள்ளார். இந்தி மொழி நாள் நேற்று, சூரத்தில் நடைபெற்ற அகில இந்திய அலுவல் மொழி மாநாட்டில் கலந்துக் கொண்ட  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “மாநில மொழிகளுக்கு எதிராக இந்தி என்ற கோணத்தில் தவறான பரப்புரை நடந்துவருகிறது. இந்தியும், குஜராத்தியும் போட்டியாளர்கள், இந்தியும், தமிழும் போட்டியாளர்கள், இந்தியும், மராத்தியும் போட்டியாளர்கள் என அவர்கள் பொய் பரப்புரை செய்கிறார்கள். நாட்டில் உள்ள எந்த மொழிக்கும் இந்தி போட்டியாளராக இருக்க முடியாது. நாட்டில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் இந்தி நண்பன் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். 

அதற்கு இன்று திக தலைவர் வீரமணி தக்க பதிலளித்தார். பிராந்திய மொழிகளுக்கு இந்தி போட்டி இல்லை என்று தெரிவித்த அமித்ஷாவுக்கு பதில் கொடுக்கும் வகையில் கி வீரமணி பேசினார்.

பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கு திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கீ.வீரமணி மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

திராவிட மண்ணை காவி மண்ணாக மாற்றுவதற்கான முயற்சிகள் தீவிரமாக உள்ள நிலையில் அண்ணாவின் படம் தேவையில்லை அவரின் பாடம் தேவை. இந்தி தான் இந்தியாவை இணைக்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா உளறுகிறார், ஆனால் இந்தி இந்தியாவை இணைக்குமா பிளக்குமா என்பதை ஒவ்வொரு மாநிலமும் சொல்லிக் கொண்டிருக்கிறது.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வீரமணி, அண்ணாவின் சாதனைகள் மற்றும் புகழ் எப்போதும் தேவைப்படுவதை விட தற்போதைய காலகட்டத்திற்கு அதிகம் தேவைப்படுகிறது என்று தெரிவித்தார்.

அதேபோல, திராவிட மாடல் ஆட்சிக்கு அடித்தளமிட்டவர் பேரறிஞர் அண்ணா என புகழாரம் சூட்டினார். திராவிட மாடல் ஆட்சி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று தமிழக அரசை கி வீரமணி பாராட்டினார்.

தமிழ்நாட்டிற்குக்  காவிகள் படையெடுத்தால், அதன் மூலம் காளிகள் வாலாட்டினால், நீளும் வால் ஒட்ட நறுக்கப்படும் என்றும், அத்துமீறல் மக்களால் தடுக்கப்படும் எனவும் திரவிட கழகத் தலைவர் கி வீரமணி எச்சரிக்கை விடுத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.