தமிழக அரசியல் சுதந்திரத்திற்கு பின் தேர்தல் அரசியலாக மாறியது. அதை சினிமாவை வைத்து சாதகமாக்கி வெற்றி கண்டவர் அண்ணா எனலாம்.
திமுகவின் வெற்றிக்கு அதன் திராவிட இயக்க அரசியல் ஒரு பக்கம் என்றால் கலைத்துறையை பயன்படுத்தியது இன்னொரு வகை அரசியல் எனலாம்.
அண்ணாவின் இந்த வழியை சரியாக கையாண்டவர் எம்ஜிஆர். இதனால் அவரும் அதேவழியில் ஆட்சியைப்பிடித்தார்.
திராவிடர் கழகம் உதயம்
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவில் இருந்த மிகப்பெரிய கட்சிகள் இந்திய தேசிய காங்கிரஸ், முஸ்லீம் லீக் மற்றும் பொதுவுடமை கட்சி மட்டுமே. பிரதேச அளவில் சென்னை மாகாணத்தில் ஜஸ்டிஸ் கட்சி பின்னர் 1944-ல் திராவிடர் கழகமாக மாறியது. அதன் நிறுவனர் பெரியார் அவரது படைத்தளபதிகளாக அண்ணா, சம்பத்,நெடுஞ்செழியன் உள்ளிட்ட தலைவர்கள், இளம் தலைவர்கள் அன்பழகன், கருணாநிதி என பல்வேறு தலைவர்கள் பட்டிதொட்டியெங்கும் திராவிர கழகத்தை கொண்டு சேர்த்தனர்.
திமுக உதயம்
1950 க்குப்பிறகு குடியரசு முறை வந்தபோது தேர்தல் முறை நடைமுறைக்கு வந்தது. தி.க. தேர்தல் அரசியலில் ஈடுபடாமல் சமூக இயக்கமாக செயல்பட பெரியார் நினைத்தார். மற்றும் சில காரணங்களால் தி.க. 1949 ஆம் ஆண்டு பிளவுபட்டது. 1949 ஆம் ஆண்டு செப்.17 அன்று திமுக உதயமானது. அதுமுதல் கலைத்துறையையை அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் திமுக பிரச்சாரத்துக்காக கையில் எடுத்தனர். கலைத்துறை சினிமாவாக மாறும் முன் மேடை நாடகங்களாக இருந்தபோது அண்ணாவும், கருணாநிதியும் பல நாடகங்களை இயற்றி அதில் திராவிட இயக்க கருத்துகளை புகுத்தினர்.
மொழிவாரியாக பிரிக்கப்பட்ட மாநிலங்கள்
மெட்ராஸ் மாகாணம் மொழிவாரி மாகாணமாக பிரிக்கப்படும் முன் 1952 ஆம் ஆண்டு தேர்தலில் அப்போதுதான் உருவாகியிருந்த திமுக தேர்தலில் போட்டியிடவில்லை. ஒன்றுபட்ட சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் பெரிய கட்சியாகவும், கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாவது இடத்திலும், முஸ்லீம் லீக் மூன்றாம் இடத்திலும் செல்வாக்கு பெற்றிருந்தது. 1953 ஆம் ஆண்டு மொழி வாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்டபோது கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லீம் லீக் கட்சிகள் ஆதிக்கம் செலுத்திய பெரும்பகுதிகள் ஆந்திரா, கேரளா பக்கம் போனது. தமிழகத்தில் பெரிய கட்சியாக காங்கிரஸும், கம்யூனிஸ்ட் கட்சியும் இருந்தது.
இடதுசாரிகளை முந்த அண்ணா எடுத்த ஆயுதம்
இதனால் இடதுசாரி கருத்துகளுடன் ஒத்துபோகும் திராவிட இயக்க அரசியலை வலுவாக முன்னெடுக்கும் கடமை திமுகவுக்கு அதன் தலைவர்களுக்கு அவசிமானது. திமுகவை தமிழகத்தில் வளர்த்தெடுக்க வேண்டுமானால் இடதுசாரிகளுக்கு மாற்றாக இரண்டாம் பெரிய கட்சியாக திமுகவை கொண்டுவர ஒரே வழி கலைத்துறை என அண்ணா முடிவு செய்தார். திமுகவில் மேடை நாடகங்கள் மூலம் அண்ணா, கருணாநிதி,என்,எஸ். கிருஷ்ணன், கே,ஆர்.ராமசாமி உள்ளிட்ட பலரும் பிரச்சாரத்தை கொண்டுச் சென்றனர்.
கலைத்துறையை தெளிவாக பயன்படுத்திய அண்ணா
திரைத்துறையில் திமுகவை கொண்டுச் சென்றதில் அண்ணாவின் பங்கு மிகப்பெரியது. திமுக ஆரம்பித்த அதே ஆண்டில் அண்ணாவின் வேலைக்காரி படம் வெளியானது. அதே ஆண்டில் அண்ணாவின் கதை வசனத்தில், என்.எஸ்.கிருஷ்ணன் நடிப்பில் வெளியான நல்லதம்பி படம் வெளியாகி சக்கைபோடு போட்டது. முடிதிருத்தும் கலைஞர் ஜமீந்தாராகி செய்யும் சீர்த்திருத்தமே நல்ல தம்பி கதை. இதன் மூலம் நிலப்பிரபுத்துவ, ஜமீந்தாரி முறைக்கு எதிரான சீர்த்திருத்த கருத்துகள், இலவச கல்வி உள்ளிட்ட பல விஷயங்களை அண்ணா பேசியிருப்பார்.
சினிமா மூலம் சீர்த்திருத்த கருத்துக்களை சொன்ன அண்ணா
நிலச்சுவாந்தார்கள் அதிகம் இடம்பெற்றிருந்ததால் நிலச்சுவாந்தார்கள் கட்சி என காங்கிரஸ் அடையாளம் காட்டப்பட்டது. ஒருபுறம் கம்யூனிஸ்டுகள் காங்கிரஸுக்கு எதிராக விவசாயிகளை விழிப்புணர்வு படுத்த அதை திரைத்துறை மூலம் எளிதாக கையகப்படுத்தினார் அண்ணா. ஓர் இரவு (1951), வேலைக்காரி (1949), நல்ல தம்பி (1949) போன்ற திரைப்படங்களின் வெற்றி திமுக தலைவர்களை உற்சாகப்படுத்தியது. திரைப்படத்துறையின் முக்கியத்துவத்தை உணர்த்தியது. அரசர் காலத்து படமானாலும் அதிலும் புரட்சிகர கருத்தை சொல்லி கால் பதித்தார் கருணாநிதி. அண்ணாவின் எழுத்தாற்றல் கலைப்பயண வழியை கருணாநிதியும் கையிலெடுத்தார்.
அண்ணா வழியில் நடந்த எம்ஜிஆர், கருணாநிதி திரைக்கலைஞர்கள்
அண்ணாவின் வழியை பின்பற்றிய கருணாநிதி திரைக்கதை வசனத்தில் வெளிவந்த பராசக்தி திரைப்படத்தின் பெருவெற்றி திமுகவுக்கு மக்களிடையே பெரிய ஆதரவைத் தேடித் தந்தது. இப்படத்தில் அறிமுகமான சிவாஜி கணேசன் ஏற்கெனவே திமுகவின் மேடை நாடகங்களில் நடித்து புகழ்பெற்றிருந்தார். இதன் பின்னர் திமுகவில் இணைந்த சிவாஜி கணேசன், கருணாநிதி, தன் வசன உச்சரிப்பால் புகழ் பெற்றிருந்த எஸ்.எஸ்.ராஜேந்திரனும், எஸ்.எஸ்.கிருஸ்ணனும், கே.ஆர்.ராமசாமி,டி.வி. நாராயணயசாமி உள்ளிட்டோரும் தமிழகம் முழுவதும் திமுக கொள்கைகளை கொண்டுச் சென்றனர்.
அண்ணாவால் ஈர்க்கப்பட்ட எம்ஜிஆர், கண்ணதாசன்
அண்ணாவின் படைப்புகளால் ஈர்க்கப்பட்ட காங்கிரஸ் அனுதாபி எம்ஜிஆர் அண்ணாவின் பணத்தோட்டம் நாவலை படித்து அண்ணா மீது மிகுந்த அபிமானம் கொண்டார். ஏற்கெனவே கருணாநிதியுடனான நட்பு எம்ஜிஆரை திராவிட இயக்க கொள்கை பக்கம் திருப்பி இருந்தது. 1952 ஆம் ஆண்டு பொதுக்கூட்ட மேடையில் எம்ஜிஆர் திமுகவுக்கு வருவதை உறுதிப்படுத்தினார். அண்ணா திரையுலகின் இளம் கலைஞர்களை தன் வசப்படுத்தியதில் அது திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தது. கண்ணதாசன் உள்ளிட்ட மிகப்பெரிய கவிஞர்கள் அண்ணாவால் திமுகவுக்குள் ஈர்க்கப்பட்டனர்.
திமுக ஆதரவு திரைக்கலைஞர்கள்
திமுகவின் ஆதரவு கலைஞர்கள் உருவாக்கிய திரைப்படங்களில் அதன் கொள்கைகளான திராவிட நாடு, இந்தி எதிர்ப்பு, பகுத்தறிவு போன்றவற்றை மறைமுகமாகவும் சில சமயங்களில் நேரடியாகவும் வெளிப்படுத்தினார்கள். திமுகவின் கொடி, சின்னம் திரைப்படங்களில் காட்டப்பட்டது. எம்ஜிஆர் தனது படங்களில் அதிகம் திமுக கொள்கைகளை பேசினார், சின்னம், கருப்பு சிவப்பு வண்ணத்தை உடையாக அணிவது என திரைப்படம் மூலம் கொண்டுச் சென்றார்.
எம்ஜிஆரின் சினிமா மாஸ்
அண்ணா, திமுகவை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் திராவிட இயக்க கொள்கைகளை கொண்டுச் செல்லும் கருவியாக கலைத்துறையை பயன்படுத்தினார். 1957 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட திமுக 15 இடங்களையும், 1962 ஆம் ஆண்டு தேர்தலில் 50 இடங்களையும் வென்றது. எம்ஜிஆரின் கலைப்பயணம் அண்ணாவோடு இணைந்ததால் அது திமுகவுக்கு பலமாக அமைந்தது. இது 1967 ல் திமுகவை ஆட்சியில் அமர்த்தும் அளவுக்கு சென்றது.
அண்ணாவிற்கு பின் அண்ணா வழியில் எம்ஜிஆர்
அண்ணாவின் மறைவுக்கு பின் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோதும், அண்ணாவின் படங்களை பயன்படுத்துவது, பாடல்களில் அண்ணாவின் படத்தை காட்டுவது, அண்ணாப்பற்றி பேசுவது என எம்ஜிஆர் தன்னை வளர்த்துக்கொள்ள அண்ணாவை பெரிதும் பயன்படுத்திக்கொண்டார். அண்ணாவின் இந்த தனித்துவம் இன்றும் திராவிட இயக்க கட்சிகள் தொடர்ந்து ஆட்சியில் தொடர்வதற்கு வழிவகுக்கிறது என்றால் அது மிகையல்ல.