மோசடி வழக்கில் ஆஜர் : ஜாக்குலினிடம் 8 மணி நேரம் போலீஸ் விசாரணை
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாக கூறி மோசடி செயலில் ஈடுபட்டு வந்தார். இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த போது 2 தொழில் அதிபருடன் பழக்கம் ஏற்பட்டு அவர்களுக்கு ஜாமீன் பெற்று தருவதாக கூறி சுகேஷ் சந்திரசேகர் தொழில் அதிபர் மனைவியிடம் 200 கோடி மோசடி செய்துள்ளார். இதையடுத்து அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக சுகேஷ், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரையும் சேர்த்துள்ளது. மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலினுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போலீஸ் முன் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜாக்குலினுக்கு 2 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. நேற்று ஆஜராக வேண்டும் என்று 3வது முறையாக சம்மன் அனுப்பட்டது. இதை தொடர்ந்து டில்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன் ஜாக்குலின் பெர்னாண்டஸ் நேற்கு காலை 11.30 மணிக்கு ஆஜரானார்.
போலீசாரின் விசாரணை முடிந்து இரவு 8 மணி அளவில் விசாரணை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுள்ளார். சுமார் 8 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாவும், குற்றத்தை ஒப்புக் கொண்ட அவர் சுகேஷ் மோசடி பேர்வழி என்பதை அறியாமல் அதனை செய்ததாகவும் ஜாக்குலின் விசாரணையில் கூறியிருப்பதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.