ஆம்பூரில் கன்டெய்னர் லாரி மோதி பள்ளி மாணவிகளான அக்கா தங்கை இருவரும் பரிதாபமாக உயிரிழதனர். அரசு மருத்துவமனைக்கு வந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் மாணவிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவரது இரு பெண் பிள்ளைகளான ஜெய ஸ்ரீ (16) ஆம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், இவரது இளைய மகள் வர்ஷா ஸ்ரீ (11) 6 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், தண்டபாணி இன்று காலை தனது இரு பெண் பிள்ளைகளையும் இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு பள்ளியில் விடச் சென்றார். அப்போது ஆம்பூர் ஓ.ஏ.ஆர்.திரையரங்கம் அருகில் உள்ள சிக்னலில் நின்று கொண்டிருந்த போது கர்நாடகாவிலிருந்து – வேலூர் நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி சாலையில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில், ஜெய ஸ்ரீ மற்றும் வர்ஷா ஸ்ரீ ஆகிய சகோதரிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர் படுகாயமடைந்த தண்டபாணியை மீட்ட அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக அவரை சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்
இந்நிலையில், கன்டெய்னர் லாரி மோதி 2 பள்ளி மாணவிகள் உயிரிழந்த நிகழ்வையடுத்து பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மாணவிகளின் உடல்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அமர்குஷ்வாஹா மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் ஆகியோர் பார்வையிட்டனர். அதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது தந்தை தண்டபாணி பார்த்து ஆறுதல் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM