திண்டுக்கல்: கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து தவித்த சாக்பீஸ் உற்பத்தியாளர்கள் மீண்டும் பள்ளி, கல்லூரி திறக்கப்பட்டு விற்பனை ஜோராக நடைபெறுவதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல்லில் மேற்கு மரிய நாதபுரத்தில் சாக்பீஸ் தயாரிப்பதை குடிசைத்தொழிலாக செய்து வருகின்றனர். ஒரு குடும்பத்திற்கு 10க்கும் மேற்பட்டோர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் திண்டுக்கல், மதுரை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தேவையான சாக்பீஸ்களை உற்பத்தி செய்து அந்தப்பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சாக்பீஸ் உற்பத்தியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. சாக்பீஸ் தயாரிக்க தேவையான மூலப்பொருள் உப்பளங்கள் இருந்து கிடைக்கும் ஜிப்சம்.
இதனை தூத்துக்குடியில் இருந்து இறக்குமதி செய்து ஜிப்சத்தை நீருடன் கலந்து அச்சில் வார்த்து எடுக்கும்போது நீளவடிவில் சாக்பீஸ் தயாராகிறது. அச்சில் வார்க்கும்போது ஒட்டாமல் இருக்க முந்திரி எண்ணெய் அச்சில் தடவப்படுகிறது. கலர் சாக்பீஸ் தேவையென்றால் பவுடரில் சேர்க்கும் நீருடன் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம் என கலர் பேஸ்ட் கலக்கி அச்சில் வார்த்து எடுத்த சாக்பீஸ்களை வெயிலில் இரண்டு நாட்கள் காய வைத்தால் சாக்பீஸ் தயாராகிவிடும். மூன்று வகையான அட்டைப் பெட்டிகளில் 100, 120, 140, என்ற எண்ணிக்கை கொண்ட சாக்பீஸ் பெட்டிகளை விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதன் விலை 15 முதல் 25 ரூபாய் வரை விற்கப்படுகிறது. 36 பாக்ஸ் அடங்கிய பெட்டி 550 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சாக்பீஸ் தயாரிப்பிற்கு தமிழக அரசு தரப்பில் எந்த விதமான உத்தரவாதமும் கிடையாது.
தலைமை ஆசிரியர்களை கொள்முதல் செய்வதால் முறையான நிலையான ஆர்டர் கிடைப்பதில்லை. இந்நிலையில் கடந்த வருடம் கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் கல்லூரிகள் செயல்படாமல் இருக்கின்ற காரணத்தினால் சாக்பீஸ் தொழில் நலிவடைந்து காணப்பட்டது. தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கு மரிய நாதபுரம், மேட்டூர், சிலுவத்தூர் ரோடு, மாவட்ட ஆட்சியர் வளாகம், கொட்டப்பட்டி ஆகிய ஊர்களில் சாக்பீஸ் தயாரிக்கும் தொழிலாளர்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர் இந்த கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாத காரணத்தினால் சாக்பீஸ் தொழில் முற்றிலும் நலிவடைந்து அவர்களுடைய வாழ்வாதாரம் முற்றிலும் நசிந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டனர். தற்போது பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டதால் சாக்பீஸ் அதிகமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு கொரோனா காலகட்டத்தில் 100 சாக்பீஸ் கொண்ட பெட்டி பத்து ரூபாய்க்கு விற்றது. ஆனால் தற்போது 100 சாக்பீஸ் கொண்ட பெட்டி 15 முதல் 25 வரை விற்கப்படுகிறது. இது பற்றி மேற்கு மரியநாதபுரத்தைச் சேர்ந்த சாக்பீஸ் தயாரிக்கும் தொழிலாளர் அசோக் என்பவர் கூறுகையில், ‘‘சாக்பீஸ் தொழில் 30 வருடங்களாக இத்தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இருந்தபோது ஒரு நாளைக்கு 15 பெட்டிகள் முதல் 25 பெட்டிகள் வரை விற்பனை இருந்து வந்தது இந்த கொரோனவைரஸ் காலத்தில் ஒரு பெட்டிக் கூட விற்க முடியாமல் இருந்து வந்தது. என்னைப்போல் திண்டுக்கல்லை சுற்றி 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட்டதால் சாக்பீஸ் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. மேலும் சாக்பீஸ் பெட்டிக்கு 10 முதல் 15 வரை விலை உயர்ந்து உள்ளதால் தற்போது மகிழ்ச்சியுடன் இருக்கிறோம்’’ என்றார்.