புதுடெல்லி: “பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை விடுதலை செய்தவர்களிடம், பெண்களின் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாது” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். லக்கிம்பூர் கேரியில் இரண்டு பட்டியலின சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தையொட்டி அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் உள்ள நிகாசன் காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தின் அருகில் இரண்டு பட்டியலின சிறுமிகள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யததாக 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக, காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜகவை தாக்கி பதிவிட்டுள்ளார். அதில், “லக்கிம்பூரில் பட்டப்பகலில் இரண்டு தலித் சகோதரிகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது மிகவும் கவலையளிக்கிறது.பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை விடுதலை செய்து, அவர்களுக்கு வரவேற்பு அளிப்பவர்களிடம் பெண்களின் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தச் சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறும்போது, உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். அவர் தனது ட்விட்டர் பதிவில், “லக்கிம்பூரில் இரண்டு சகோதரிகள் படுகொலை செய்யப்பட்டிருப்பது மனதை உலுக்குகிறது. அந்தச் சிறுமிகள் பட்டடப் பகலில் கடத்தப்பட்டதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். நாளிதழ்கள், தொலைக்காட்சிகளில் பொய்யான விளம்பரங்களைக் கொடுப்பதால் சட்டம் – ஒழுங்கை மேம்படுத்தி விட முடியாது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஏன் அதிகரித்து வருகின்றன?” என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய லக்கிம்பூர் கேரி காவல் எஸ்.பி., “இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரே இரவிற்குள் போலீஸார் சுஹைல், ஜூனைத், ஹபிசுல், ரஹ்மான், கரிமுதீன், ஆரிஃப் மற்றும் சோட்டு ஆகிய ஆறு பேரை கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், சகோதரிகள் ஜூனைத், சுஹைலின் வற்புறுத்தலின் பேரில் புதன்கிழமை மதியம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்கள் இருவரும் சகோதரிகளை பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது” என்று தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த 2022 – ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தின் போது, அன்று கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றுவந்த குற்றவாளிகள் 11 பேரை குஜராதில் ஆளும் பாஜக அரசு ஆக.15ம் தேதி விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.