உயிரி தொழில்நுட்பத்துறையில் பேராசிரியரான சுதாகர் சிவசுப்பிரமணியம், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பத்து ஆண்டுகள் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தற்போது பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். அத்துடன் பல்கலைக்கழக தொல்லியல் மையத்தின் இயக்குநராகவும் செயல்படுகிறார். மரபணுக்களை அடிப்படையாகக் கொண்டு மருத்துவத்தில் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறார். பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஆட்டிசம் (Autism) குறித்து 2003 -ல் ஆராயத் தொடங்கினார்.
ஆட்டிசம் பாதித்த குழந்தைகளைப் பற்றி முந்தைய கட்டுரையில் எழுதியிருந்தார். இந்தக் கட்டுரையில் அந்தப் பிரச்னைக்கான தீர்வு குறித்து அவர் எழுதியுள்ளதைப் பார்ப்போம்…
ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு நிறைய பயிற்சிகள் தேவைப்படுகின்றன. பயிற்சிகள் மூலம் மட்டுமே இவர்களை முன்னேற்ற முடியும். அsவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
1. சிறப்புப் பள்ளி (Special Education)
இந்தக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க, பயிற்சிபெற்ற ஆசிரியர்களைக் கொண்ட சிறப்புப் பள்ளிகள் இயங்குகின்றன. நூற்றுக்கணக்கான படங்களை வைத்து இந்தக் குழந்தைகளுக்குச் சொல்லித் தருகின்றனர். பெற்றோர்களும் இந்த வகை கற்பித்தலைக் கட்டாயம் தெரிந்து கொண்டால், வீட்டில் வைத்துச் சொல்லித்தர உதவும். இதனால் குழந்தையிடம் விரைவாக முன்னேற்றம் கிடைக்கும்.
2. பேச்சுப் பயிற்சி (Speech Therapy)
பல நுட்பங்களைக் கொண்டு இந்தக் குழந்தைகளுக்குப் பேசக் கற்றுத்தரும் கலையிது. பெற்றோர்களும் இந்தப் பயிற்சியின் போது குழந்தையின் அருகிலிருந்து இந்த நுட்பங்களை கற்றுக் கொண்டால் வீட்டில் குழந்தைகளுக்குப் பயிற்சி அளிக்க உதவும். அமெரிக்காவில் அதிகம் சம்பளம் வாங்குபவர்கள் பேச்சுப் பயிற்சி வல்லுநர்கள்தான்!!
3. மனோதத்துவ சிகிச்சை (Psychotherapy)
இந்தக் குழந்தைகள் பலவற்றைத் தவறுதலாகப் புரிந்து கொள்வார்கள் அல்லது சரியான புரிந்துணர்வு இருக்காது. உதாரணமாக ஒரு கைக்குழந்தை அழுதால், ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்குப் பிடிக்காமல் இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். ஆட்டிச குழந்தைக்கு இந்த நிலையைப் புரியவைக்க அழும் குழந்தைக்குப் பால் அல்லது சாக்லேட் கொடுத்தால் அழுவதை நிறுத்தும் எனப் புரியவைக்க வேண்டும். சிக்கல் நிறைந்த சவாலான வேலை இது. ஆனால் இந்தத் துறை வல்லுநர்கள் இதனை திறம்படச் செய்வார்கள். பெற்றோர்களும் தெரிந்துகொள்ள வேண்டும்.
4. உடற்பயிற்சி சிகிச்சை (Physiotherapy)
மற்றவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ள முடியாத இந்தக் குழந்தைகளிடம் நடையில் அல்லது கை அசைவில் குறையிருக்க வாய்ப்புகள் அதிகம். மேலும் கை,கால் வலுவிழந்து இருக்கவும் வாய்ப்புண்டு. குறைகளைக் களைய அதற்குத் தகுந்தாற்போல் உடற்பயிற்சி சிகிச்சை அளிக்க வேண்டும்.
5. தொடு உணர்வுப் பயிற்சி (Sensory Therapy)
இந்தக் குழந்தைகள் சில பொருள்களைத் தொட விரும்ப மாட்டார்கள். உதாரணமாக சாம்பார் கலந்த சோற்றைத் தொட விரும்பவில்லை என நினைத்துக் கொள்ளுங்கள். ஏன் உனக்குத் தொடப் பிடிக்கவில்லை எனக் கேட்டால் கேள்வியும் புரியாது, பதிலும் சொல்லத் தெரியாது. குழந்தைகள் நிலையும் பரிதாபமாக இருக்கும். அதே வேளையில் பெற்றார்கள் நிலையும் தர்மசங்கடம்தான்.
இதற்கு மனோதத்துவ அடிப்படையில் காரணம் கண்டறிந்து பயிற்சி அளிக்கப்படும். உதாரணமாக அரிசி, கடுகு, குன்றி மணிகள், ஜெல்லி, கூழ் போன்ற பொருள்கள் சேர்த்த தண்ணீரில் கையைவிட்டுப் பிசையவைத்து பயிற்சி அளிக்கப்படும்.
மேலும் உள்ளங்கால்களுக்குப் பல உணர்வுகளைக் கொடுக்கும் வண்ணம் நடைபாதைகள் (Sensory walk) அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் வெறும் கால்களில் நடக்கப் பயிற்சி அளிக்கப்படும்.
பல உணர்வுகளைக் கொடுக்கும் இந்த நடைபாதை பத்து அடிக்குக் கூழாங்கற்கள், அடுத்த பத்து அடிக்கு மணல், அடுத்து சல்லிக்கற்கள், அடுத்து புல் தரை எனக் கால் பாதத்திற்குப் பல உணர்வுகளைக் கொடுக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும். இந்தப் பாதையில் நடந்தால் மன அழுத்தம் குறையும்.
6. வேலைவாய்ப்புப் பயிற்சி (Occupational Therapy)
படிப்புக்கும் எதிர்கால வேலைவாய்ப்பிற்கும் தொடர்புள்ளது என்பது உண்மை. இது இந்தக் குழந்தைகளுக்கும் பொருந்தும். என்னதான் குறைபாடுகளைக் கொண்ட குழந்தைகளாக இருந்தாலும் அவர்களிடம் தனித்தன்மையான சில திறமைகள் இருக்கும். அவற்றைக் கண்டறிந்து பயிற்சி அளிக்கப்படும்.
உதாரணமாகப் படம் வரைதல், வண்ணம் தீட்டுதல், இசை மற்றும் நடனப் பயிற்சி என நிறைய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்தக் குழந்தைகளின் எதிர்கால வாழ்வை எளிதாக்க வேலைவாய்ப்பிற்கென்றே தனியாக வேலைவாய்ப்பு பயிற்சி மையமும் தேவை. கூடவே இவர்களுக்குத் தனித்து வாழத் தேவையான பயிற்சியும் வழங்க வேண்டும்.
இவை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பது கடினம். மற்றும் நிறைய செலவும் ஆகும். சாதாரண குடும்பத்தினரால் இதனை எல்லாம் தன் குழந்தைக்குத் தரமுடியாது. இதனை கருத்தில் கொண்டு சென்னையில் உள்ள NIEPMD (National Institute of Empowerment of Person with Multiple Disability) என்ற நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது. இங்கே மேற்கண்ட அனைத்தும் இலவசமாகக் கிடைக்கின்றன.
மேலும் ஆந்திராவிலும் இப்படியொரு ஒரு நிறுவனம் உள்ளது. அடுத்து முழுமையான புனர்வாழ்வு மையங்கள் (Composite Rehabilitation Centre (CRC ) பல உள்ளன. கோழிக்கோடு, அந்தமான், மணிப்பூர், அஸாம் ஆகிய இடங்களில் இயங்கி வருகின்றன. அதாவது ஒரு மாநிலத்திற்கு ஒன்று என இந்த மையங்கள் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இந்த மையங்களிலும் மேற்கண்ட அனைத்துப் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.
பயிற்சி மையங்கள்
ஆட்டிசத்திற்கு உலகின் தலைசிறந்த பயிற்சி, அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஆரஞ்சு கவுன்டியில்தான் கிடைக்கிறது. கவுன்டி என்பது நம்மூர் தாலுகா மாதிரியான இடம். ஆரஞ்சு கவுன்டியில்தான் உலகில் சராசரி சம்பள விகிதம் அதிகம். அங்குதான் ஹாலிவுட் உள்ளது.
ஆனால் அங்கு மேற்கண்ட ஆறு பயிற்சிகளும் ஒரே இடத்தில் கிடைக்காது. ஒவ்வொரு பயிற்சிக்கும் சுமார் 10 முதல் 20 கிலோமீட்டர் தொலைவிற்கு காரில் சுற்றிவர வேண்டும். ஆனால் சென்னையில் உள்ள NIEPMD -ல் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கின்றன. பெரும்பாலான பயிற்சியாளர்கள் சிறந்த முறையில் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றுகின்றனர்.
இத்தகைய மையங்களில் ஒன்றுக்கு, இந்தக் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். முறையாக உங்கள் குழந்தைகளைப் பரிசோதித்து விவரங்களைத் தருவார்கள். தாய் தந்தையரில் ஒருவர் தினமும் இங்கு குழந்தையை அழைத்துச் சென்று பயிற்சி அளித்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். ஆட்டிச குழந்தைகளுக்குப் பல அரசு சலுகைகள் உள்ளன. அவை அனைத்தையும் தெரிந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்தக் குழந்தைகளுக்கு ஒரு வழிகாட்டி கட்டாயம் வேண்டும். இவர்களது சாதனையில், பெற்றோர்கள் எவ்வாறு பங்களிக்கலாம் என்பதை அடுத்த கட்டுரையில் காண்போம்.