பீஜிங்: உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் இன்னும் முற்றிலுமாக ஒழிந்துவிடவில்லை என்றாலும் அது முடியும் தருவாயை நெருங்கிவிட்டது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதோனம் தெரிவித்துள்ளார்.
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா எனும் கொடிய வைரஸ் நோய் முதன் முதலாக கண்டறியப்பட்டது.
சீனாவில் முதலில் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக ஊடகங்களில் செய்தி வந்த போதெல்லாம் இவ்வளவு பெரிய நெருக்கடியை அந்த கொரோனா ஏற்படுத்தும் என்று பலரும் கற்பனைக் கூட செய்து இருக்க மாட்டோம்.
லட்சக்கணக்கானோர் பலி
அந்த அளவுக்கு கொரோனா சில மாதங்களில் ஒட்டு மொத்த உலகத்தையும் புரட்டி போட்டது. மின்னல் வேகத்தில் உலகமெங்கும் பரவத்தொடங்கிய கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழி பிதுங்கின. பயணத்தடைகள், பொது முடக்கம் என பல கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி இந்த கொரோனா வைரஸ் அனைத்து நாடுகளுக்குள்ளும் ஊடுருவியது. இதோடு கோடிக்கணக்கான மக்களிடம் பரவி இந்த வைரஸ் உலக அளவில் லட்சக்கணக்கான உயிர்களையும் பறித்துவிட்டது.
இரண்டரை ஆண்டுகள்
உக்கிர தாண்டவம் ஆடிய கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசியையும் விஞ்ஞானிகள் ஒருவழியாக கண்டுபிடித்தனர். இதனால், கொரோனா வைரசின் ஆட்டம் கொஞ்சம் குறைந்தாலும் மீண்டும் உருமாறி வேகமாக பரவியது. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக உலக மக்களின் இயல்பு வாழ்க்கையை கொரோனா வைரஸ் முடக்கிப் போட்டது. கடந்த சில மாதங்களாகத்தான் உலக நாடுகள் கொரோனா பாதிப்பின் தாக்கத்தில் இருந்து வேகமாக மீண்டு வருகிறது.
2020 மார்ச் மாதத்திற்கு பிறகு
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இன்னமும் முழுமையாக நீங்காத நிலையில், தற்போது மக்களை நிம்மதி பெருமூச்சு விடவைக்கும் வகையில் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதோனம் வெளியிட்ட அறிவிப்பு உள்ளது. இது தொடர்பாக ஜெனீவாவில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- ”உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்படும் மரணங்கள் குறையத்தொடங்கியுள்ளது. 2020 மார்ச் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக அந்த அளவுக்கு பலி எண்ணிக்கை குறைந்துள்ளது.
முடியும் தருவாயை நெருங்கிவிட்டது
இது முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. கொரோனா இன்னும் முற்றிலுமாக ஒழிந்துவிடவில்லை என்றாலும் அது முடியும் தருவாயை நெருங்கிவிட்டது. இந்த வாய்ப்பை நாம் நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதை செய்ய தவறும் பட்சத்தில் வைரஸ் உருமாற்றங்கள் அடையலாம். இதனால், நிச்சயத்தன்மை அதிகரிக்கக்கூடும். உயிரிழப்புகளை அதிகரிப்பதற்கான நிலையும் ஏற்பட்டு விடும். எனவே நாம் மிகவும் எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும்” என்றார்.
28 சதவீதம் குறைவு
கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை கடந்த வாரத்தை விட 22 சதவீதம் குறைந்துள்ளதாக ஐநா சுகாதார அமைப்பு வெளியிட்ட வாராந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் சுமார் 11 ஆயிரம் உயிரிழப்புகள் கடந்த வாரம் ஏற்பட்டுள்ளது. புதிதாக 31 லட்சம் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது முந்தைய வாரத்தை விட 28 சதவீதம் குறைவு ஆகும்.
குளிர் காலத்தில் அதிகரிக்கும்
கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறையத்தொடங்கினாலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற தவறினால், பல பாதிப்புகள் கணக்கில் வராமல் செல்லக்கூடும் என்று எச்சரித்துள்ள உலக சுகாதார அமைப்பு, குளிர் காலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அதை எதிர்கொள்ள உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்திக்கொள்ளவும் வலியுறுத்தியுள்ளது.