செல்போனில் பேசியபடி பைக்கில் வந்த இளைஞர் டிராஃபிக் போலீஸை தாக்கியதால் சேலத்தில் பரபரப்பு

வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துக் காவலரை, செல்போனில் பேசியபடி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் தாக்கிய சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாநகர் தெற்கு போக்குவரத்து பிரிவில் போக்குவரத்துக் காவலராக பாண்டியன் (42) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வழக்கம்போல் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவ்வழியே பொன்னம்மா பேட்டை பகுதியைச் சேர்ந்த கோகுல்ராஜன் என்பவர் செல்போனில் பேசியபடி இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது அவரை போக்குவரத்து காவலர் பாண்டியன், தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் ஆதிரமடைந்த கோகுல்ராஜன், காவலர் பாண்டியனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
image
இதையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில் கோகுலராஜ் போக்குவரத்து காவலரை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் காவலரின் மூக்கு தண்டுவட பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டிய நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து போக்குவரத்து காவலரை தாக்கிய கோகுல்ராஜனை சேலம் நகர காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், கோகுல்ராஜ் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர் செல்வத்தின் தம்பி மகன் என்பது தெரியவந்தது.
image
இதனிடையே, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போக்குவரத்து காவலர் பாண்டியனை மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
சேல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டி வந்த நபரை தட்டிக் கேட்ட காவலரை தாக்கிய சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.