கொல்லத்தில் இன்று ஒரு நாள் ஓய்வு; காங்கிரஸ் தேசிய தலைவர்களுடன் ராகுல் காந்தி திடீர் ஆலோசனை: கோவாவில் எம்எல்ஏக்கள் ஓட்டத்தால் அப்செட்டா?

திருவனந்தபுரம்: கன்னியாகுமரியில் கடந்த 7ம் தேதி பாரத் ஜோடா யாத்திரை என்ற பெயரில் ஒற்றுமை நடை பயணத்தை ராகுல்காந்தி எம்பி தொடங்கினார். இந்த பயணத்தை தேசிய கொடி வழங்கி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 நாட்கள் தொடர்ந்து நடைபயணம் செய்த ராகுல்காந்தி பல்வேறு அமைப்பு, விவசாயிகள், பொதுமக்களை சந்தித்து பேசினார்.

அதன் பிறகு கேரளாவில் நடைபயணத்தை தொடர்ந்து வருகிறார். நேற்று கேரளாவில் 4வது நாள் நடைபயணம் மேற்கொண்டவர் கொல்லம் மாவட்டத்தில் பயணத்தை நிறைவு செய்தார். முன்னதாக சாத்தனூரில் ஓய்வெடுத்தபோது பள்ளி மாணவர்கள் இடையே ராகுல்காந்தி எம்பி கலந்துரையாடினார். அப்போது மாணவ, மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பொறுமையாக பதில் அளித்தார். இந்தியா எப்போது மற்ற நாடுகளை விட முதலிடத்திற்கு வரும் என்று ஒரு மாணவி கேட்டார்.

அதற்கு பதில் அளித்து ராகுல் காந்தி கூறியதாவது: ஒரு தனிப்பட்ட நபரோ, நாடோ முதல் இடத்தில் வருவதைவிட மக்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என்பதுதான் முக்கியம். அமெரிக்கா உள்பட பல வளர்ச்சி அடைந்த நாடுகள் சிறையில் இருப்பவர்களின் எண்ணிக்கையிலும், ஆயுதங்களை பயன்படுத்துவதிலும் முதலிடத்தில் உள்ளது. அதேபோலத்தான் தற்போது இந்தியாவும் குற்ற செயல்களில் முதலிடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றார்.

கொல்லத்தில் ஆலோசனை
கன்னியாகுமரியில் தொடங்கி இதுவரை மொத்தம் 8 நாட்கள் 160 கி.மீ.க்கு மேல் ராகுல்காந்தி எம்பி நடைபயணம் மேற்கொண்டு உள்ளார் ராகுல் காந்தி எம்பி. இதற்கிடையே இன்று ஒரு நாள் ஓய்வு எடுக்கிறார். நேற்று இரவு கொல்லம் மாவட்டம் பள்ளிமுக்கு பகுதியில் பயணத்தை நிறைவு செய்தார். மீண்டும் நாளை (16ம் தேதி) காலை 7 மணிக்கு நடை பயணத்தை தொடங்க திட்டமிட்டு உள்ளார்.

இந்த நடைபயணத்துக்கு பொதுமக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில், கோவாவை சேர்ந்த 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவி உள்ளனர். இது தொடர்பாக இன்று ராகுல்காந்தி தேசியத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது. அதேபோல் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களையும் ராகுல்காந்தி சந்தித்து பேசுகிறார்.

50 நிமிடங்களில் 6.5 கிலோ மீட்டர்
திருவனந்தபுரம் மாவட்ட எல்லையான நாவாயிக்குளத்தில் இருந்து நேற்று 30 நிமிடங்கள் தாமதமாகத் தான் ராகுல் காந்தி புறப்பட்டார். ஆனால் பகலில் ஓய்வெடுத்த கொல்லம் மாவட்டம் சாத்தனூருக்கு குறிப்பிட்ட நேரத்தை விட 5 நிமிடங்களுக்கு முன்பே சென்று விட்டார். நாவாயிக்குளத்தில் இருந்து கொல்லம் மாவட்டம் பாரிப்பள்ளியில் உள்ள ஸ்ரீராமபுரம் வரை உள்ள 6.5 கி.மீ. தூரத்தை அவர் 50 நிமிடங்களில் கடந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.