புதுடெல்லி: அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக பேராசிரியர் சங்க தலைவராக தமிழக பெண் முதல் முறை யாக தேர்வாகி உள்ளார். மேலும்,முஸ்லிம் அல்லாத 2 உதவிப் பேராசிரியர்களும் உறுப்பினர்களாக தேர்வாகி உள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் அலிகரில் சுமார் 150 ஆண்டு பழமையான அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் உள்ளது. மத்தியப் பல்கலைக்கழகமான இதில், ‘அமுட்டா’ எனப்படும் பேராசிரியர்கள் சங்கம் செயல் பட்டு வருகிறது. இவர்களில் சுமார் 25 சதவிகிதம் பேர் பெண் கள். இவர்கள், சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தலில் வாக் களித்தாலும் முக்கியப் பொறுப்பு களில் போட்டியிட ஏனோ முன் வருவதில்லை.
இந்நிலையில், முதல் முறையாக பெண் பேராசிரியர் ஒருவர், சங்க தலைவர் பதவிக்கு மனு செய்ததுடன், போட்டியின்றியும் தேர்வாகி உள்ளார். இவர் சேலத்தை சேர்ந்த தமிழர் முனைவர் எஸ்.சாந்தினிபீ எனும் வரலாற்றுத் துறை பேராசிரியர். கடந்த 2,000 ஆண்டு முதல் இங்கு பணியாற்றும் பேராசிரியர் சாந்தினிபீ, இதற்கு முன்பும் அலிகர் பல்கலை.யில் 2 முறை வரலாறு படைத்துள்ளார்.
2012-ல் முதல் பெண்
கடந்த 2012-ல் முதல் பெண்ணாகஅமுட்டா சங்க நிர்வாக உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு தேர்வானார். மேலும் முக்கிய அமைப்பான கல்விக் குழுவிலும் 2015-ல் முதல் பெண்ணாக தேர்வு செய்யப்பட்டார். இது ஒரு தேசியப் பல்கலைக்கழகமாக இருந்தும், வட மாநிலத்தவர்களே பெரும்பாலான முக்கியப் பொறுப்புகளுக்கு தேர்வாகி வந்தனர். இந்த வழக்கம் முதல் முறையாக ஒரு தமிழரால் முறியடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் பேராசிரியர் எஸ்.சாந்தினிபீ கூறும்போது, ‘‘அமுட்டா சங்கத்தின் முதல் நிர்வாக உறுப்பின ரான பின் என்னை தொடர்ந்து பெண்கள் பலர் அப்பதவியில் தேர்வாகி வருகின்றனர். இனி தலைவர் போன்ற முக்கியப் பொறுப்புகளுக்கும் பெண் பேராசிரியர்கள் போட்டியிடுவார்கள் என நம்புகிறேன். எனக்கு ஆண், பெண் என அனைத்து பேராசிரியர்களும் பேராதரவு அளித்திருப்பது மகிழ்ச்சி’’ என்றார்.
இதன் 8 நிர்வாக உறுப்பினர் களுக்கான தேர்வில் போட்டியிட்ட அனைவரும் ஒருமனதாக தேர் வாகி உள்ளனர். இவர்களில் 2 உதவிப் பேராசிரியர்கள் யோகேஷ் குமார் யாதவ் (வரலாற்றுத் துறை)மற்றும் டாக்டர் கராடே பங்கஜ் பிரகாஷ் (பல் மருத்துவக் கல்லூரி)ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இவர்களை போல், முஸ்லிம் அல்லாதவர்கள் கடந்த காலங்களில் அமுட்டாவில் பல முறை போட்டியிட்டும் வென்ற தில்லை.
47 ஆயிரம் மாணவர்கள்
சுமார் 47,000 மாணவர்கள் பயிலும் அலிகர் முஸ்லிம் பல்கலைகழகம், கடந்த 1875-ல் சர் சையதுஅகமது கான் எனும் கல்வி சீர்திருத்தவாதியால் நிறுவப்பட்டது. இதில் இளநிலை பட்டம் பெற்ற முதல் மாணவர் ஈஸ்வரி பிரசாத் உபாத்யா. அப்போது முதல் இது மதநல்லிணக்கத்துக்கு பெயர்பெற்று வருகிறது. இப்பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மவுலானாக்கள் ஆதிக்கமும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
செயலாளர் மற்றும் உதவிசெயலாளர் பதவிகளுக்காக இன்று நடைபெற இருந்த தேர்தல், நிர்வாகப் பிரச்சினைகளால் அக்டோபர் 10-ம் தேதிக்குதள்ளி வைக்கப்பட்டுள்ளது.