புதுச்சேரி: 55 மாதங்களாக ஊதியம் தராததால் புதுச்சேரி சட்டப்பேரவை அருகே வயிற்றில் ஈரத்துணி அணிந்து பாப்ஸ்கோ ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோவின் ஊழியர்கள் நலச்சங்கத்தினர் (ஏஐடியூசி) சட்டப்பேரவை அருகே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 55 மாத சம்பளம் வழங்க வேண்டும், தீபாவளி பஜார் மானியத்தொகை ரூ.62 லட்சம் வழங்க வேண்டும், பாப்ஸ்கோ ரேஷன் கடைகளுக்கு 6 ஆண்டு வாடகை பாக்கியை தர வேண்டும், மதுபான ஆலைகளை தனியாருக்கு வழங்கி பாப்ஸ்கோவை புனரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பாப்ஸ்கோ நிறுவனத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து நடத்தக் கோரி வருகின்றனர். இதனால் தொடர் போராட்டத்தை துவக்கியுள்ளனர். 2-ம் நாளாக இன்று வயிற்றில் ஈரத்துணி அணிந்து போராட்டம் நடத்தினர்.
போராட்டத்துக்கு ஏஐடியூசி மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் தலைமை வகித்தார். பாப்ஸ்கோ ஊழியர் நல சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்று அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.