உத்தரகாண்டின் பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள பி.டி பாண்டே மருத்துவமனைக்கு ஒரு தம்பதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தங்களின் 4 வயது குழந்தையுடன் சென்றிருக்கின்றனர். அப்போது குழந்தையின் உடல்நிலை மிக மோசமாக இருந்திருக்கிறது. ஆனால், அந்தக் குழந்தையை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க மருத்துவர்கள் மறுத்துவிட்டாகக் கூறப்படுகிறது.
மேலும், குழந்தையை வெளிப்புற நோயாளிகள் பிரிவுக்கு அழைத்துச் செல்லும்படியும் மருத்துவர்கள் வலியுறுத்தியிருக்கின்றனர். ஆனால், அந்தப் பிரிவில் அதிகம் பேர் வரிசையில் நின்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் குழந்தையின் பெற்றோர் நீண்டநேரம் வரிசையிலேயே காத்திருந்திருக்கின்றனர். இந்த நிலையில், குழந்தையின் உடல்நிலை மோசமடைந்து, தன் தந்தையின் மடியிலேயே உயிரிழந்துவிட்டது. குழந்தையின் இறப்பை தாங்க முடியாமல் பெற்றோர் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்துவிட்டது.
குழந்தையின் பெற்றோர் உட்பட அனைவரும் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களின் அலட்சியப்போக்கின் காரணமாகவே குழந்தை உயிரிழந்துவிட்டதாக குற்றம்சாட்டுகின்றனர்.