தேனி: தேனி புதிய பஸ் ஸ்டாண்டு செல்லும் பைபாஸ் சாலையில் உள்ள மலைச்சரிவை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். தேனி நகருக்கான புதிய பேருந்து நிலையம் தேனி&பெரியகுளம் பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு இப்புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. தேனியில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்டிற்கு செல்லக்கூடிய பைபாஸ் சாலை மதுரை பிரிவில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்டு வரை சுமார் 20 அடி உயரம் ஏறி, பஸ் ஸ்டாண்டிற்கு இறங்கி செல்லும் வகையில் இருந்தது.
இப்புதிய பஸ் ஸ்டாண்டு திறக்கப்படும் முன்பாக, மிக உயரமான மலைச்சாலை நெடுஞ்சாலைத் துறை மூலம் இருபக்கமும் கரைக்கப்பட்டது. இதனால் சாலையின் இருபுறமும் செங்குத்தாக சிப்பிபாறைகளுடன்கூடிய மலை மிக உயரமாக உள்ளது. செங்குத்தாக உள்ள மலையின் மேல் பகுதியில் இருந்து பெரிய அளவிலான பாறைகளும், மண்ணும் அடிக்கடி சரிந்து சாலைக்கு வருகிறது.அப்போது சாலையோரமாக நடந்து செல்லும் பயணிகள் அலறியடித்தபடி ஓடவேண்டியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பாக இம்மலையில் இருந்து கற்கள் மற்றும் மண் சரிந்தது.
இதில் இச்சாலையில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த இரு மின்கம்பங்களில் ஒரு மின்கம்பம் சேதமடைந்தது. மற்றொரு மின்கம்பம் முழுமையாக சாய்ந்தது. அந்த நேரம் பயணிகள் வராததால் அதிர்ஷ்டவசமாக உயிர்பலி தவிர்க்கப்பட்டது.இரவு நேரத்தில் இருள்சூழ்ந்த நேரத்தில் மழைக்காலங்களில் பயணிகள் நடந்து செல்லும்போது மண்சரிவு ஏற்பட்டால் பயணிகள் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம், இப்பகுதியை ஆய்வு செய்து, சாலையோரம் மண்சரிவு ஏற்பட்டாலும் மண் பயணிகள் மீது விழுகாதபடி, மலையை ஒட்டி தடுப்பு வேலி அல்லது மலை உயரத்திற்கு தடுப்புச் சுவர் அமைக்க முன்வரவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.