வாஷிங்டன்: அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் அமெரிக்கா முக்கியக் கூட்டாளியாகத் திகழும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாடு சுதந்திரம் அடைந்ததன் 75-ம் ஆண்டை ஒட்டி, அமெரிக்காவில் உள்ள 75 இந்திய – அமெரிக்க அமைப்புகள், இந்திய சுதந்திரத்தின் அம்ருத மகோத்சவ விழாவை தலைநகர் வாஷிங்டனில் கொண்டாடின. அமெரிக்க இந்திய நட்புறவு கவுன்சில், சேவா இண்டர்நேஷ்னல், ஏகல் வித்யாலயா, இந்து ஸ்வயம்சேவக் சங்கம் உள்ளிட்ட 75 அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டன.
இந்நிகழ்ச்சிக்கான பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துச் செய்தி: “இந்திய சுதந்திரத்தின் 75-ம் ஆண்டு அம்ருத மகோத்சவ விழா வாஷிங்டனில் கொண்டாடப்படுவது, இரு நாட்டு நட்புறவில் மற்றுமொரு மைல்கல்.
நவீன ஜனநாயகக் குடியரசு நாடு, பன்முகத்தன்மை கொண்ட நாடு, தொன்மையான நாகரிகத்திற்கு உரிய நாடு, காலத்தையும் இடத்தையும் கடந்த கலாசாரத்தைக் கொண்ட நாடு என இந்தியா பல்வேறு விஷயங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்தியாவின் இந்தப் பெருமைகளுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக ஒருவர் எவ்வாறு இருக்க முடியும் என்பதற்கு வெளிநாடு வாழ் இந்தியர்களே சாட்சி.
அடுத்த 25 ஆண்டுகளில் அடைய வேண்டிய பல்வேறு உயர்ந்த இலக்குகளை இந்தியா கொண்டிருக்கிறது. இதற்கான இந்தியாவின் பயணத்தில் மிக முக்கியக் கூட்டாளியாக அமெரிக்கா இருக்கும்.
இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறது. இந்தியா சுதந்திரத்தை பெற்ற வழிமுறை மிகவும் தனித்துவமானது. அது மிகச் சிறந்த மனித விழுமியங்களைக் கொண்டது. அதன் காரணமாகவே அமைதி, சுதந்திரம் ஆகியவற்றின் மீது அன்பு கொண்டவர்களுக்கு இந்தியா மிகப் பெரிய ஊக்க சக்தியாக திகழ்ந்து வருகிறது.
இந்தியாவின் உயர் மதிப்பீடுகளை தங்கள் வாழ்க்கையின் மூலம் வெளிப்படுத்தி நறுமணம் வீசச் செய்பவர்கள் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள். அவர்கள் இந்தியாவின் மெச்சத்தக்க தூதுவர்களாக இருக்கிறார்கள். அனைத்து கலாசாரத்தையும் மதிப்பது, அனைவரோடும் இணைந்து செயல்படுவது, அனைவரின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுவது என வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார்கள்.
சுதந்திரத்தின் மீதான காதல், ஜனநாயக மதிப்பீடுகள் மீதான உறுதி ஆகியவை இந்தியாவையும் அமெரிக்காவையும் பிணைக்கும் முக்கியக் கூறுகள். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவும், உலகின் மிகப் பழமையான ஜனநாயக நாடான அமெரிக்காவும் சுதந்திரத்தை இணைந்து கொண்டாடுவது மிகவும் அழகான ஒன்று” என்று பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.