’வெந்து தணிந்தது காடு’ துப்பாக்கி சத்தங்கள் நிரம்பி வழியாத 'A Feel Good Gangster Movie'!

மும்பை கேங்ஸ்டர் கதைகள் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் வெளிவந்துள்ளன. வெந்து தணிந்தது காடும் அப்படியொரு கேங்ஸ்டர் கதைதான். ஆனால் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனின் புதுமையான ட்ரீட்மெண்ட்டால் படம் சிறப்பாகவே வந்துள்ளது. Feel Good Gangster Movie இப்படியொரு பதம் புதுமையானதாக உங்களுக்குத் தோன்றினால் அதுவே வெந்து தணிந்தது காடு. A Feel Good Gangster Movie.

image

திருநெல்வேலி அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் முள்காட்டில் வேலை செய்கிறார் முத்துவாக நடித்திருக்கும் சிம்பு. அவர் எப்படி மும்பை டான் ஆகிறார் என்பதே திரைக்கதை. பொதுவாக கேங்ஸ்டர் படங்களில் பரபரப்பு இருக்கும் இடைவிடாத துப்பாக்கிச் சத்தம் இருக்கும். ஆனால் இந்த சினிமா ரொம்பவே செட்டில்டான திரைக்கதையுடன் தேவையான அளவு துப்பாக்கிச் சத்தத்துடன் நகர்கிறது.

விண்ணைத்தாண்டி வருவாயா பாதிப்பு தீரவே தீராது என்பது போல இக்கதையிலும் தன்னை விட வயதில் மூத்த சித்தி இத்னானியுடன் காதல் கொள்கிறார் சிம்பு. இருவருக்கு இடையே காதல் காட்சிகள் இதம். மலையாளி கேங்ஸ்டர் கும்பலுக்கும் அண்ணாச்சி கும்பலுக்கும் இடையே நடக்கும் அதிகாரப் போட்டியில் பல உயிர்கள் சுட்டு வீழ்த்தப்படுகின்றன. பொதுவாக எல்லா கேங்ஸ்டர் கதையும் ஒன்றுதான் அதிகாரம் நோக்கிய நகர்வு. வெந்து தணிந்தது காடும் அதுவே ஆனால் இக்கதையினை கவுதம் வாசுதேவ் மேனன் அணுகியிருக்கும் விதம் புதுமை. இசக்கி முத்து புரோட்டா கடை உள்பட மும்பை தெருக்கள் பலவும் செட் போடப்பட்டு எடுத்திருக்கிறார்கள். அது பல இடங்களில் செயற்கையாக உள்ளது. அதே நேரம் பிரமாதமான ஒளிப்பதிவில் நம்மை கட்டி அணைத்துக் கொள்கிறார் சித்தார்த்தா நுணி.

image

ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடல்களும் பின்னனி இசையும் இதம். எப்போ மச்சான் வரப் போற பாடல் ரிப்பீட் மோடில் முணு முணுக்க வைக்கிறது. தாமரையின் வரிகளும் சேர ஒரு அழகான ஆல்பம் கிடைத்திருக்கிறது. சிம்புவின் நடிப்பும், சித்தி இத்னானியின் நடிப்பும் மிகப்பெரிய பலம். சிம்பு மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்திருக்கிறார். ஆம் கவுதம் வாசுதேவ் மேனனும். இயக்குநர் தனது முந்தைய படங்களில் கையாளும் நரேட்டிவ் ஸ்டைல் கதை சொல்லல் பாணியினை தவிர்த்து நேரடியாக காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்கள் வழியே கதையினை சொல்லி இருப்பது இந்த வெற்றிக்கும் இன்னுமொரு முக்கியக் காரணம். இந்த பாணியினை இன்னும் சில படங்களுக்காவது இயக்குநர் தொடரவேண்டும். சிம்புவின் நண்பனாக வரும் அப்புக்குட்டிக்கு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ராதிகா, பவா செல்லத்துரை இருவரும் சிலகாட்சிகளே வந்து சென்றாலும் நடிப்பு கச்சிதம்.

இது போன்ற கேங்ஸ்டர் கதைகளில் துரோகங்களும் கூடவே வரும் இக்கதையில் துரோகிகள் உண்டு. ஆனால் அவர்களது முகம் வெளிப்படும் இடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அது போல கேங்கில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது என அடிக்கடி சொல்கிறார்கள் ஆனால் திரைக்கதையில் ரவுடிகள் சுதந்திரமாக எங்கும் சென்று வரும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது.

image

திருநெல்வேலியில் இருந்து ஒரு காலத்தில் கூட்டம் கூட்டமாக மக்கள் மும்பை நோக்கிச் சென்றனர். சூழ்நிலை காரணமாக சிலர் அங்கு தாதாகிரி வேலை (அடியாள் வேலை) செய்திருக்கலாம். ஆனால் இந்த சினிமாவில் காட்டப்படும் மொத்த திருநெல்வேலிக் காரர்களும் ஏதோ கொலை செய்து பிழைக்கவே மும்பை சென்றனர் என்பது போல தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது. திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. இந்த கேள்வியினை தவிர்க்கும் படியேனும் சில நல்ல கேரக்டர்களை காட்டியிருக்கலாம்.

image

தென் தமிழகத்தின் முக்கிய நகரங்களான மதுரை திருச்சியிலிருந்து கூட மும்பைக்கு ஒன்றிரண்டு ரயில்களே புறப்படுகின்றன. அவையும் குர்லா தாதர் வரையே செல்லும். ஆனால் நாகர்கோவில் மும்பை எக்ஸ்பிரஸ் வாரத்திற்கு குறைந்தது 5 நாள்கள் வரை இயக்கப்படுகிறது. அந்த ரயில் மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினல்ஸ் வரை செல்லும். இதற்கு காரணமே 80களிலும் அதற்கு முன்பும் கூட டவுன்சவுத்திலிருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் மும்பைக்கு பிழைக்கப் போனது தான். திருநெல்வேலி, நாகர்கோவில் பகுதிகளில் நிலவிய வறுமை மட்டும் இதற்கு காரணமல்ல அக்காலத்தில் அப்பகுதியில் நிலவிய கடுமையான சாதிய அடக்குமுறை பலரை மும்பை நோக்கி அழைத்துச் சென்றது என்பதே உண்மை. இது போன்ற விசயங்களை எல்லாம் ஜெயமோகன் பதிவு செய்யாமல் வசதியாக தவிர்த்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.

விவாதங்கள் தவிர்த்து வெந்து தணிந்தது காடு செழிக்கும்.

– Sathya Subramani

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.