அமராவதி: ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் திருமணமான நாளில் முதலிரவில் மாப்பிள்ளை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் நடந்து முடிந்த நிலையில், திருமண வீட்டின் கொண்டாட்டங்கள் ஓய்வதற்கு முன்னரே புது மாப்பிள்ளை மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையினர் மாப்பிள்ளையின் உடலைக் கைப்பற்றி தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
காதல்
ஆந்திரப் பிரதேசத்தின் அன்னமய்யா மாவட்டத்தில் வசித்து வருபவர் 25 வயதான துளசி பிரசாத். இவருக்கும் அதே பகுதியில் வசித்து வந்த 23 வயதான இளம் பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இருவரும் நீண்ட நாட்கள் காதலித்து வந்த நிலையில் அவரவர் வீட்டில் விஷயத்தை தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆனால் இருவரும் தங்கள் காதலில் உறுதியாக நின்ற நிலையில், இரு வீட்டிலும் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டனர்.
திருமணம்
இதனையடுத்து மதனப்பள்ளியில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. எளிய முறையில் திருமணம் நடைபெற்றதையடுத்து மணமகள் வீட்டில் முதலிரவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. எனவே துளசி பிரசாத் தனது மாமியார் வீட்டில் இருந்துள்ளார். சிறிது நேரம் உறவினர்களுடன் பேசிவிட்டு பின்னர் துளசி பிரசாத்தும் அவரது மனைவியும் முதலிரவு அறைக்குள் நுழைந்துள்ளனர். பின்னர் சற்று நேரத்திற்கெல்லாம் வெளியில் பதட்டத்துடன் வந்த மனைவி, துளசி பிரசாத் மயங்கி விழுந்துவிட்டதாக தெரிவித்தார்.
மாரடைப்பு
பின்னர் குடும்பத்தினர் துளசி பிரசாத்தை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் பிரசாத் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனை கேட்ட குடும்பமே கதறி அழுதுள்ளது. புதியதாக திருமணம் நடந்து அதே நாளில் முதலிரவில் புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் குடும்பத்தினரிடம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மருத்துவர்கள் சொல்வதென்ன
இவ்வாறு மரணங்கள் மிக அபூர்வமாகதான் ஏற்படும் என்று பாலியல் மருத்துவர்கள் சொல்கின்றனர். குறிப்பாக இதய நோய் உள்ளவர்கள், மாரடைப்பு வந்தவர்கள், பைபாஸ் சிகிச்சை செய்துகொண்டவர்கள், இதயத்தில் ஸ்டன்ட் வைத்துக்கொண்டவர்கள் ஆகியோருக்கு இந்த அபாயம் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், இந்த பாதிப்பு உள்ளவர்கள் உரிய மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே உடலுறவில் ஈடுபட வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.