கேரளா: இரு வகையானவர்களே காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறுகிறார்கள் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காங்கிரஸ் கட்சியால் அனைத்தையும் பெற்றவர்கள், விசாரணை அமைப்புகளின் நெருக்கடியை எதிர்கொள்பவர்கள் என இரு வகையானவர்கள் மட்டுமே காங்கிரசை விட்டு வெளியேறுகின்றனர்.முதல் வகைக்கு மிகச் சிறந்த உதாரணம் குலாம் நபி ஆசாத். இளைஞர் காங்கிரஸ் தலைவர், பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர், பொதுச் செயலாளர், மத்திய கேபினெட் அமைச்சர் என அனைத்தையும் காங்கிரஸ் அவருக்கு அளித்தது.
இரண்டாவது வகைக்குச் சிறந்த உதாரணம் தற்போது அசாம் முதல்வராக உள்ள ஹிமந்த பிஸ்வா சர்மா. அவர் காங்கிரசில் இருந்தபோது அவர் மீது பாஜக நாள்தோறும் குற்றச்சாட்டுக்களைக் கூறி வந்தார். காங்கிரசில் இருந்து கட்சித் தாவியதும், அவர் மீது குற்றம் சுமத்துவதை பாஜக நிறுத்திவிட்டது. அதோடு அவரை முதல்வராக்கியிருக்கிறது” என்று விமர்சித்தார்.
கோவாவில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் பாஜகவுக்குத் தாவியது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த ஜெய்ராம் ரமேஷ், “காங்கிரஸ் அவர்களை எம்எல்ஏ-க்களாக ஆக்கி இருக்கக் கூடாது. மிகப் பெரிய ஊழல்வாதிகளாகக் குற்றம்சாட்டப்பட்ட அவர்களும் இனி பாஜகவின் வாஷிங்மெஷினில் இருந்து துவைத்து எடுக்கப்பட்டு குற்றமற்றவர்களாகிவிடுவார்கள்” என்றார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரை, தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அவர் தொடர் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இந்தப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்தப் பயணம் குறித்து கருத்து தெரிவித்த ஹிமந்த பிஸ்வா சர்மா, ராகுல் காந்தி இந்த பயணத்தை பாகிஸ்தானுக்கு மேற்கொள்ள வேண்டும் என்றும், ஏனெனில் இந்தியா ஏற்கெனவே ஒற்றுமையாகத்தான் இருக்கிறது என்றும் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.