பத்திரிகையாளர்களை மௌனமாக்குவதற்கான முயற்சிகள் நாளுக்கு நாள் வெட்கக்கேடான அளவில் அதிகரித்து வருவதாக காட்டம் தெரிவித்துள்ள விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், ஊடக சுதந்திரத்துக்கு உறுதுணையாக இருப்போம் என வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “செப்டம்பர் 15 ஆம் தேதியை உலக ஜனநாயக நாளாக ஐநா சபை 2007 ஆம் ஆண்டு அறிவித்தது. இந்நாளில் ஜனநாயகத்தின் மதிப்பை வெளிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு உறுப்பு நாடும் நிகழ்ச்சிகளை நடத்தவேண்டுமென ஐநா கேட்டுக்கொண்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு மையக் கருத்தை ஐநா அறிவிக்கும். 2022 ஆம் ஆண்டுக்கான மையக் கருத்தாக ‘ ஊடக சுதந்திரம்’ என்பதை ஐநா அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஐநா சபை வெளியிட்டுள்ள பின்வரும் விவரங்கள் கவனத்துக்குரியவை:
“ கடந்த ஐந்தாண்டுகளில் உலக மக்கள் தொகையில் 85 சதவீதம் பேர் தங்கள் நாட்டில் பத்திரிகை சுதந்திரம் குறைந்துள்ளதாக தெரிவித்தனர் என யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. உலகளவில் ஊடகங்கள் அதிகளவில், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் தாக்குதல்களை எதிர்கொள்கின்றன, கைது நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன ; ஆன்லைன் வெளிப்பாட்டை கட்டுப்படுத்த அவதூறு சட்டங்கள் மற்றும் இணைய பாதுகாப்பு அல்லது வெறுப்பு பேச்சு சட்டங்களைப் பயன்படுத்துதல்; பொது பங்கேற்பு சட்டங்கள் (SLAPPS) மற்றும் வழக்குகளின் அதிகரித்துவரும் பயன்பாடு; ஊடகவியலாளர்களைக் குறிவைத்து அவர்களின் பணிக்கு இடையூறாக கண்காணிப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் அதிகரித்து வருகிறது .
கோவிட்-19 ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடியானது, ஊடகங்கள் உண்மைகளைச் சேகரிப்பதும் மதிப்பீடு செய்வதும் தவறான தகவல்களை எதிர்த்துப் போராடுவதும் முன்னெப்போதையும் விட மிக முக்கியமானதாக மாறியுள்ளது என்பதைக் காட்டுகிறது. ஆன்லைன் பாதுகாப்பை உறுதி செய்வதும் முக்கியமானதாக மாறியுள்ளது. குறிப்பாக பெண் பத்திரிகையாளர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். 125 நாடுகளைச் சேர்ந்த 714 பெண் ஊடகவியலாளர்களில் 73 சதவீதம் பேர் தங்கள் பணியின் போது ஆன்லைன் வன்முறையை அனுபவித்ததாக யுனெஸ்கோ மற்றும் சர்வதேச பத்திரிகையாளர்களுக்கான மையம் (ICFJ) கண்டறிந்துள்ளது.
பத்திரிகையாளர்களை மௌனமாக்குவதற்கான முயற்சிகள் நாளுக்கு நாள் வெட்கக்கேடான அளவில் அதிகரித்து வருகின்றன. 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டின் இறுதி வரை, 455 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டதாக யுனெஸ்கோ பதிவு செய்துள்ளது, அவர்கள் தங்கள் பணி தொடர்பாகவோ அல்லது பணியில் இருந்தபோதோ கொல்லப்பட்டுள்ளனர்.
உலக பத்திரிக்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் விடுத்துள்ள தனது செய்தியில், ‘அதிகாரத்திடம் உண்மையைப் பேசுவதற்கும், பொய்களை அம்பலப்படுத்துவதற்கும், வலுவான, நெகிழ்ச்சியான நிறுவனங்களையும் சமூகங்களையும் கட்டியெழுப்புவதற்கும் ஊடகங்களின் பணியை எல்லா இடங்களிலும் உள்ள அரசாங்கங்கள், ஊடக நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆதரிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.”
ஊடக சுதந்திரம் கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளாகிவரும் நாடாக இந்தியா உள்ளது. 2022 உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை 180 நாடுகளில் 150 ஆக சரிந்துள்ளது என்று உலகளாவிய ஊடகக் கண்காணிப்பு அமைப்பான ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் (RSF) வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு (2021) வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்தியா 142வது இடத்தில் இருந்தது.
சனாதனப் பயங்கரவாதம் தனது பிரச்சாரக் கருவிகளாக ஊடகங்களை மாற்றுகிறது. பணிய மறுப்போர் அடக்குமுறைக்கு ஆளாக்கப்படுகின்றனர். ‘அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல்’ என்பது உயிரைப் பணயம் வைக்கும் ‘சாகசம்’ என ஆகியுள்ளது. கௌரி லங்கேஷின் படுகொலை நமக்கு அதைத்தான் சுட்டிக் காட்டுகிறது. ஊடக சுதந்திரம் இல்லாத நாட்டில் ஜனநாயகம் உயிர்பிழைக்க முடியாது. ஜனநாயகத்தின்மீதும் ஊடக சுதந்திரத்தின்மீதும் அக்கறை கொண்டவர்களின் முன்னால் இப்போது இரண்டு பணிகள் உள்ளன:
1) அதிகாரத்தை எதிர்த்து நிற்கும் துணிச்சல்மிக்க ஊடகவியலாளர்களை ஆதரிப்பது;
2) அதிகாரத்தின் பதிலியாக மாறிப்போன embedded journalism என்பதை அடையாளம் காண்பது.
இந்தப் பணிகளைச் செய்வோம்! ஊடக சுதந்திரத்துக்கு உறுதுணையாக இருப்போம்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.