கடும் விலை வீழ்ச்சியால் ஆவேசம் செண்டு மல்லி பூக்களை தரையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்

சத்தியமங்கலம்: கடும் விலை வீழ்ச்சியால் ஆவேசமடைந்த விவசாயிகள் செண்டு மல்லி பூக்களை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2000 ஏக்கர் பரப்பில் செண்டுமல்லி பயிரிடப்பட்டுள்ளது.  இங்கு விளையும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஏலம் முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆவணி மாத முகூர்த்த நாட்கள், விநாயகர் சதுர்த்தி மற்றும் ஓணம் பண்டிகையையொட்டி செண்டுமல்லி பூக்கள் 1 கிலோ ரூ.60 முதல் ரூ.100 வரை விற்பனையானது. தற்போது விசேஷ நாட்கள் முடிவடைந்ததால் செண்டுமல்லி பூ விலை கடும் வீழ்ச்சி அடைந்தது.

1 கிலோ செண்டு மல்லி பூக்களை ரூ.10க்கு கூட வாங்க வியாபாரிகள் முன்வரவில்லை. இதனால் நேற்று சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டிற்கு செண்டுமல்லி பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் சாக்கு மூட்டைகளில் இருந்த பூக்களை தரையில் கொட்டி, போராட்டத்தில் ஈடுபட்டனர். செண்டுமல்லி பூச்செடிகளை பயிரிட்டு, வியர்வை சிந்தி உழைத்து, ஆட்களுக்கு கூலி கொடுத்து பூக்களை பறித்து, வாடகை வாகனங்களில் ஏற்றி சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வந்த நிலையில் பூக்கள் விற்பனை ஆகாதது அவர்களை கடும் வேதனையிலும், ஆவேசத்திலும் ஆழ்த்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.