விளையாட்டுத்துறையின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் வெற்றிக்காக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்களின் அனுபவத்தையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளும் நோக்கில் முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர்களின் சந்திப்பு நேற்று முன்தினம் (13) கொழும்பில் நடைபெற்றது.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் திரு.ரொஷான் ரணசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த சகலரும் அழைக்கப்பட்ட இச்சந்திப்பில் விளையாட்டு துறை அமைச்சர்கள் என்ற ரீதியில் விளையாட்டுத்துறையின் கடந்த கால அனுபவங்கள் ஊடாக எதிர்காலத்தில் விளையாட்டுத்துறை சார்ந்த விடயங்களை வலுவாக மாற்றுவதற்கான ஆலோசனைகளும் அறிவுரைகளும் பெறப்பட்டன.
இந்தக் கலந்துரையாடலில், அனைத்து அமைச்சுக்கள், நிறுவனங்கள், திணைக்களங்கள், மாகாண சபைகள், விளையாட்டு சங்கங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான ஏனைய நிறுவனங்களை கலந்துரையாடலில் ஒருங்கிணைத்து பொதுவான வேலைத்திட்டமொன்றை உருவாக்குவது காலத்திற்கேற்ற செயற்பாடாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, ஜீவன் குமாரணதுங்க, காமினி லொகுகே, மஹிந்தானந்த அளுத்கமகே, நவீன் திஸாநாயக்க, தயாசிறி ஜயசேகர, பைசர் முஸ்தபா, ஹரின் பெர்னாண்டோ மற்றும் தேசிய விளையாட்டு சபையின் தலைவர் திரு.அர்ஜுன ரணதுங்க, அதன் செயலாளர் திருமதி சுஜானி போகொல்லாகம, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஆலோசகர் திருமதி சுதத் சந்திரசேகர ஆகியோர் கலந்துகொண்டனர்.