சேலம்: ஒடிசாவில் நடந்த கொலை மற்றும் கூட்டுக்கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரை சேலத்தில் சுற்றி வளைத்து போலீசார் பிடித்தனர். கொலை கும்பல் தலைவன் 4 துப்பாக்கி பதுக்கி வைத்துள்ளதாக பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளார். வடமாநிலங்களில் கொலை- கொள்ளையில் ஈடுபடும் நபர்கள், தமிழகத்திற்கு தப்பி வருகின்றனர். இங்கு பதுங்கியிருந்து தறி மற்றும் கட்டிட வேலைகளில் ஈடுபடுகின்றனர். இதேபோல் ஒடிசாவில் கொலை மற்றும் கூட்டுக்கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை சேலத்தில் பதுங்கி இருந்தபோது, போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் கல்லிக்கோட் போலீஸ் ஸ்டேசன் எல்லைக்குட்பட்ட வீட்டில் புகுந்த ஒரு கும்பலை சேர்ந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டு ஒருவரை கொலை செய்து விட்டு, பணம் நகையை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். கல்லிக்கோட் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை தேடி வந்தனர். இந்த கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள், சேலத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஒடிசா தனிப்படை போலீசார் சேலம் வந்து ரகசியமாக விசாரித்தனர். குற்றவாளிகள் கொண்டலாம்பட்டி புத்தூரில் செல்வம் என்பவருடைய பவர் லூமில் வேலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.
இதனால் தனிப்படை போலீசார், மாநகர போலீசாரின் உதவியை கேட்டனர். இதையடுத்து கொண்டலாம்பட்டி உதவி கமிஷனர் ஆனந்தி, இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், நுண்ணறிவு பிரிவு எஸ்.ஐக்கள் ராமகிருஷ்ணன், சிவஞானம், எஸ்.எஸ்.ஐக்கள் கிருஷ்ணன், முருகன், ராஜ்குமார், சுப்பராயன் ஆகியோர் புத்தூரில் தங்கியிருந்த இடத்தை அதிரடியாக நேற்று முற்றுகையிட்டனர். ஒடிசா போலீசார், கொலையாளிகளை அடையாளம் காட்டியதும், உடனடியாக அவர்களை சுற்றிவளைத்தனர். பலராம் துர்கா(30), லட்மண் பத்ரா(27), சுனிலா பத்ரா (22), கிட்ரா ஷீகி (22) ஆகிய 4 பேரையும் பிடித்து விசாரித்தனர். இவர்களில் பலராம் துர்கா பயங்கரமான கொலையாளியாவார்.
இவரிடம் நடத்திய விசாரணையில், ஒடிசாவில் 4 துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து 4 பேரையும் ஒடிசா போலீசாரிடம் சேலம் போலீசார் ஒப்படைத்தனர். அவர்கள் பாதுகாப்புடன் ஒடிசாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஒடிசாவில் கொலை செய்து விட்டு சேலத்தில் பதுங்கியவர்களை பிடித்து ஒடிசா போலீசாரிடம் ஒப்படைத்துள்ளோம். ஏற்கனவே வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் சேலத்தில் வேலைக்கு வந்தால் அவர்கள் குறித்து நன்றாக விசாரிக்க வேண்டும், அவர்கள் பற்றிய முழு தகவலையும் போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும் என வேலைக்கு சேர்ப்பவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது,’’ என்றனர்.