மதுரை: மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்த காலை உணவுத்திட்ட தொடக்க விழாவில் இருக்கைகள் இல்லாமல் தவித்த மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் தங்களை விழாவுக்கு அழைத்துவிட்டு அவமானப்படுத்தியதாக மேயர், அதிகாரிகள் மீது அதிருப்தி தெரிவித்தனர்.
முன்னாள் முதல்வர் அண்ணாவின் 114வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இன்று காலை முதல்வர் ஸ்டாலின் காலை உணவுத் திட்டத்தை மதுரையில் தொடங்கி வைத்தார். முதல்வரின் இந்த காலை உணவுத் திட்ட தொடக்க விழா மதுரை கீழ அணணாதோப்பு மாநகராட்சி ஆதிமூலம் தொடக்கப் பள்ளியில் நடந்தது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், வணிகவரித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், வணிகவரித்துறை அமைசசர் பி.மூர்த்தி, நிதித்துறை அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மதுரை மக்களவை தொகுதி எம்.பி.சு.வெங்கடேசன், மேயர் இந்திராணி, ஆட்சியர் அனீஸ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழா நடந்த தொடக்கப்பள்ளி வளாகம் மிக குறுகிய இடம் என்பதால் மொத்தமே 50 பேர் மட்டுமே அமரக்கூடியதாக இருந்தது. ஆனால், நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டதால் திமுக முக்கிய நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்களை நெருக்கி இருக்கைகள் போட்டு அமர வைக்கப்பட்டனர். விழாவுக்கு சற்று தாமதமாக வந்த மாநகராட்சி மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள், அமர்வதற்கு இருக்கைகள் இல்லாமல் விழா அரங்கில் தவித்தனர். அவர்களை வரவேற்று இருக்கைகள் போட்டு அமர வைக்கக்கூட ஆட்கள் இல்லை. அதனால், அதிருப்தியடைந்த மாநகராட்சி கவுன்சிலர்கள், ”மாநகராட்சி அதிகாரிகளை தொலைபேசியில் அழைத்து நீங்கள்தானே விழாவுக்கு அழைத்தீர்கள். அங்கு சென்றால் எங்களுக்கு அமரக் கூட சேர் போடவில்லை” என்று கூறினர்.
அதற்கு எதிர்முனையில் பேசியவர்கள், ”எங்களுக்கு எதுவும் தெரியாது” என்று அழைப்பைத் துண்டித்ததாகத் தெரிகிறது. ஏற்கெனவே கடந்த வாரம் மதுரை தமுக்கம் மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநாட்டு மையம் திறப்பு விழா நிகழ்ச்சியிலும் விழா நடந்த அரங்கிற்குள் அனுமதிக்காமல் வெளியே திறந்தவெளியில் மாநராட்சி கவுன்சிலர்கள் அமர வைக்கப்பட்டிருந்தனர். அப்போதும் கவுன்சிலர்கள் தங்களை விழாவுக்கு அழைத்து அவமானப்படுத்திவிட்டதாக மாநகராட்சி அதிகாரிகளிடம் அதிருப்தியடைந்தனர். மேலும், முதல்வரை நெருங்கவிடக்கூடாது, பார்த்துவிடக்கூடாது என்பதற்காக மேயர் தரப்பினர் தங்களை வெளியே அமர வைத்ததாக மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.
இந்த தகவல் அறிந்த மேயர் கணவர் பொன்வசந்த், ஸ்டாலின் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபோது கவுன்சிலர்களை பார்க்க வைத்தார். மேலும், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் அனைத்து கவுன்சிலர்களையும் அழைத்து மேயருடன் குரூப் போட்டோ எடுத்து சமாதானம் செய்தார். ஏற்கெனவே மேயருக்கும், மாநகராட்சி திமுக கவுன்சிலர்களுக்கும் மாநகராட்சி கூட்டங்கள், மண்டல கூட்டங்களில் முட்டல், மோதலுமாக இருந்துவந்த நிலையில் தமுக்கம் மாநாட்டு மையம் திறப்பு விழா இருக்கை விவகாரம் வெளிப்படையாகவே புகைச்சலை உருவாக்கியது.
இந்நிலையில் இன்று மதுரை கீழ அண்ணாதோப்பு மாநகராட்சி ஆதிமூலம் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சர் பங்கேற்ற காலை உணவுத்திட்டம் தொடக்க விழாவிலும் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்படாததால் அவர்கள் கோபத்தின் உச்சத்துக்கே சென்றனர். முதல்வர் விழாவை புறக்கணித்து செல்வதாக மிரட்டியதால் செய்தி மக்கள் தொடர்பு ஊழியர்கள் பதறியடித்துக் கொண்டு, விழா அரங்கில் ஆங்காங்கே கிடந்த இருக்கைகளை எடுத்து வந்து அவர்களை கிடைக்கிற இடத்தில் அமர வைத்து சமாதானம் செய்தனர். ஆனாலும், அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான தங்களை அழைத்து வந்து அவமானப்பத்தியதாக மாநராட்சி மேயர், மாநகராட்சி அதிகாரிகள் மீது அதிருப்யில் இருக்கின்றனர்.
கடந்த கால கசப்பான நிகழ்ச்சிகளால் ஒரு சிலரை தவிர திமுக ஆண் கவுன்சிலர்கள் இன்று நடந்த நிகழ்ச்சிக்கு வரவே இல்லை. கூட்டணி கட்சி கவுன்சிலர்களும் வரவில்லை. திமுக பெண் கவுன்சிலர்கள், பெண் மண்டலத்தலைவர்கள்தான் வந்திருந்தனர். அவர்களும் வந்து முறையான இருக்கை ஒதுக்காததால் அதிருப்தியுடனேயே விழா முடிந்து வெளியேறினர். மதுரை மாநகராட்சியில் மேயர்-மாநகராட்சி கவுன்சிலர்கள் இடையே நடக்கும் இந்த மோதல் போக்கால் இயல்பாக நடக்கும் நிகழ்வுகளைக் கூட தங்களை அவமானப்படுத்த மேயர் செய்ததாக மாநகராட்சி கவுன்சிலர்களை நினைக்கத்ச் செய்கிறது என்று கூறப்படுகிறது.
ஏற்கெனவே நிதி அமைச்சர் பழனிவேல் தியாராஜன், மாநகர செயலாளர்கள் முன்னாள் அமைச்சர் பொன்முத்துராமலிங்கம், கவுன்சிலர் ஜெயராமன் போன்றவர்களுக்கு இடையேயான கோஷ்டி அரசியலில் தற்போது மாநகராட்சியில் நீடிக்கும் மேயர் – கவுன்சிலர் மோதல் மாநகர திமுகவிலும் கட்சிக்கும் பின்னடைவை ஏற்படுத்த தொடங்கியிருக்கிறது. இதற்கிடையில் மாநகராட்சி அதிகாரிகள், மேயருக்கும் – கவுன்சிலர்களுக்குமான இடைவெளியைப் பயன்படுத்தி காரியங்களை சாதித்துக் கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.