தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளில் அவர் யாருக்கு சொந்தம் என்பது போல் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தி.மு.க, அ.தி.மு.க.,வினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பரபரப்பை உருவாக்கியது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரான அறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அண்ணா பிறந்தநாளை தி.மு.க, அ.தி.மு.க.,வினர் வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: சவுக்கு சங்கருக்கு ஆறு மாதம் சிறை – ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு
தமிழகத்தின் பல இடங்களில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் அவரது போட்டோவுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்து நிலையம் அருகே அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்றும் இருகட்சியினரும் விமரிசையாக கொண்டாட திட்டமிட்டு இருந்தனர்.
தி.மு.க சார்பில் அண்ணா சிலை உள்ள பகுதியில் கட்சி கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன. சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து இன்று காலை அ.தி.மு.க.,வினர் அங்கு வந்து இரட்டை இலை சின்னத்தை அண்ணாவின் சிலை அருகே வைத்தனர். இதற்கு தி.மு.க தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் அ.தி.மு.க, தி.மு.க.,வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருகட்சியினர் இடையே நடந்த பேச்சு வார்த்தை மோதல் கைக்கலப்பாக மாறும் நிலைக்கு சென்றது.
இதனால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர் கோபி தலைமையிலான போலீசார் அங்கு சென்று இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இருதரப்பும் சமாதானமாக செல்லும்படி போலீசார் கூறினர். இதற்கு தி.மு.க, அ.தி.மு.க.,வினர் ஒகே சொன்னதால் அங்கு மோதல் உருவாகவில்லை. இந்த சம்பவம் இன்று மணப்பாறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இதனைத் தொடர்ந்து அங்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
க. சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil