மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே லட்சுமாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமரன் (41). இவரது மனைவி வித்யா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பி.காம் பட்டாதாரியான முத்துக்குமரன், காய்கறி வியாபாரம் செய்து வந்தார். போதிய வருமானம் இல்லாததால் தனியார் ஏஜென்சி மூலம் கடந்த 3ம் தேதி குவைத்துக்கு வேலைக்கு சென்றார். இந்நிலையில் 7ம்தேதி குவைத்தில் முத்துக்குமரன் இறந்து விட்டதாக வந்த தகவலால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். வப்ரா என்ற இடத்தில் உள்ள பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்க வலியுறுத்தியுதாகவும், அதற்கு மறுத்த முத்துகுமரனை குவைத் முதலாளி, சுட்டுக்கொன்றதாகவும் கூறப்படுகிறது.
பர்வானியா நகரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. இந்நிலையில், சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், திமுக எம்பி அப்துல்லா ஆகியோர், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூலம் குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் அளித்து நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, நேற்றுமுன்தினம் முத்துக்குமரன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் அவரது உடல் இன்று (16ம் தேதி) விமானம் மூலம் குவைத்தில் இருந்து திருச்சிக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர், சொந்த ஊரான கூத்தாநல்லூர் அடுத்த லெட்சுமாங்குடிக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்படுகிறது.